TS குமார்

சிங்கப்பூர் தமது பொன்விழாவைக் கொண்டாடுகிற வேளையில், முன்னோடித் தலைமுறையினர்களில் ஒருவர்மீது நாம் நமது கவனத்தைச் செலுத்துவோம். சிங்கப்பூர் மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர் ஆகாயப் படை முதல் தேசிய சுய உதவிக் குழுவான சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழகம்(சிண்டா) வரை தமது பங்கை ஆற்றி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளார்.

ரெட்ஹில் வட்டாரத்தில் வளர்ந்த திரு குமார், தமது இளமை பருவ அனுபவங்கள் பலவற்றை நம்முடன் பகிர்ந்துகொண்டார். குறிப்பாகப் பள்ளிக்கூட நாட்கள் மற்றும் அக்காலத்தின் கல்வி சூழலைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். அவருடன் பேசும்போது மீண்டும் சமூகக் கல்விப் பாடத்திட்டத்தைக் கற்பது போன்ற உணர்வு இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஏற்படும். தெருக்களில் சுதந்திரமாக திரிந்த குண்டர் கூட்டங்களால் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள், புகிட் ஹோ சுவீ தீச்சம்பவம், முதல் ஹொக் லீ கலவரம் போன்ற வரலாற்றின் முக்கிய தருணங்களை அவர் கடந்து வந்துள்ளார்.

img1

“என் பெற்றோர் என்மீது கவனம் செலுத்தி என்னை பள்ளிக்குச் செல்ல வைத்தது எனக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்தது.”

சிங்கப்பூர் ஆகாயப் படை தலைமயகம் முதன் முதலில் தொடங்கப்பட்டப்போது திரு குமார் அதில் சேர்ந்தார். திரு குமார் ஆகாயப் படையில் அன்று முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார். ஒருவேளை அவரது பெற்றோர் அக்காலத்தில் இந்திய தேசிய ராணுவத்துடன் கொண்டிருந்த ஈடுபாட்டினால் இத்தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். திரு குமார் தமது வாழ்க்கையை ராணுவத்தில் இளம் வயதிலேயே துவங்கிவிட்டார். குறிப்பாக சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற தொடக்கக்காலத்தில் அண்டை நாடுகளிடமிருந்து சிங்கப்பூரைக் காக்க பலமான ராணுவத்தின் முக்கியத்துவத்தைச் திரு குமார் வலியுறுத்தினார்.

“அண்டைவீட்டார் என் அம்மாவிடம் புகார் செய்தது இன்னும் என் நினைவில் உள்ளது – உங்கள் மகன் படித்துள்ளார், பிறகு ஏன் ஆயுதப் படையில் சேர்கிறார்?”

சிங்கப்பூரை வெளி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதுடன், திரு குமார் சிங்கப்பூரின் உள்நாட்டு மேம்பாட்டிற்கும் உதவி செய்துள்ளார். ஒரு புது நிறுவனமாக இருந்ததால், வளர்ச்சியடைய பலமான தலைமைத்துவம் சிண்டாவுக்குத் தேவைப்பட்டது. இந்த நோக்கத்திற்காகவே அப்போது மேஜராக இருந்த திரு குமாரும் மற்ற இரண்டு மேல் அதிகாரிகளும் இந்த அமைப்புக்குள் சேர்க்கப்பட்டனர். முதலில் திரு குமார், இளம் இந்தியர்களுக்கிடையே நிலவிய குறைந்த கல்வி விகிதத்தை முன்னேற்றுவதில் செயல்பட்டார். இப்பிரச்சனையைக் கையாள, திரு குமாரும் அவரது நண்பர்களும் அதன் அடிப்படை மூல காரணத்தை அடையாளங்கண்டனர். குறைந்த வருமானம் தரும் வேலையாக இருந்தாலும் முன்பே வேலையில் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் உயர்க்கல்வியைக் கற்கும் வாய்ப்பினை இளையர்கள் பெரும்பாலும் தட்டிக்களித்தனர்.

திரு குமார், இளம் பருவத்தில் கல்வி கற்பதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்கள் சிலவற்றை பகிர்ந்துக்கொண்டார். இனம் மற்றும் வீட்டு வருமான அளவு போன்றவை எப்படி குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதை பற்றியும் அவர் பகிரந்துக்கொண்டார். இளையர்கள் கொண்டுள்ள மனப்பான்மையை மாற்ற அவரும் அவரது குழுவும் எதிர்நோக்கிய சாவல்களைப் பற்றி திரு குமார் கூறினார். சிண்டாவுடன் பணியாற்றியபோது அவர் அடைந்த பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டார். சிண்டாவுடனான அவரது சேவை, அவரது குடும்பத்தையும் உள்ளடக்கும். திரு குமார் கல்வியின் பால் கவனம் செலுத்தியபோது, அவரது தாய் வளர்ப்பு நலத்துறையுடன் பணியாற்ற தொடங்கினார்.

img1

"சொற்ப ஊதியத்தில் சம்பாதிக்கும் வாய்ப்புக்கிடைத்ததால், கண்மூடித்தனமாக சேர்ந்து விடுவார்கள். ஆனால், அவர்கள் நீண்ட காலத் திட்டத்திற்குத் திட்டமிடாததை உணரவில்லை.”

சிண்டாவுடன் வேலை செய்வதைத் தவிர, சிங்கப்பூர் இந்தியக் கல்வி அறக்கட்டளையில் உறுப்பினராகவும் திரு குமார் செயல்பட்டார். இந்திய இளையர்களிடையே அதிக கல்வி தரத்தை உயர்த்த முயன்றார். தொழில்நுட்ப மாணவர்களின் பட்டயக்கல்வித் தரத்தை உயர்த்தி பட்டதாரிகளின் எண்ணிக்கையை உயர்த்த திரு குமாரும் அவரது சக உருப்பினர்களும் படும்பாடு பட்டனர்.

ஆனால், இன்றைய சூழ்நிலை மாறிவிட்டதை திரு குமார் ஒப்புக்கொண்டார். இன்று, தரம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டுள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில்(ஐடியி) படிக்கும் மாணவர்களுக்கு டிப்பிளோமா பெறாமலேயே வேலைகளை வெற்றிகரமாகப் பெற முடிகிறது. மாணவர்களும் பட்டதாரிகளும் வேலையிடத்தில் முன்னேறும் வாய்ப்பு வழங்கப்படுவதால் முன்புபோல் இல்லாமல் பல இளையர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவதைக் கண்டு திரு குமார் மன நிறைவடைகிறார்.

img1

"பல இந்தியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதைக் கண்டு நாங்கள் திருப்தியடைந்தோம்.”

சிங்கப்பூருக்குப் பெரும் பங்கையாற்றியுள்ள திரு குமாருக்கு பொன்விழா கொண்டாட்டங்களின் விண்டேஜ் அணிவகுப்புப் பிரிவில் பங்கெடுக்க அழைப்பு வந்தது ஆச்சரியம் ஒன்றுமில்லை. திரு குமார் பெருமையுடன் தனது முன்னாள் சீருடையை அணிந்துகொண்டு மீண்டும் மற்ற சிங்கப்பூர் முன்னோடித் தலைமுறையினரோடு கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் நான்கு மாதங்களுக்கு அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இது நமது இளையர்களுக்கே எளிதான காரியமில்லை. ஆனால் நமது முன்னால் தலைமுறையினர் இதை செய்துமுடித்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும். தமது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் கழித்த திரு குமார், சிங்கப்பூரின் தொடர்ச்சிக்கு வித்திடும் இராணுவப் படை போன்ற நிறுவனங்களின் முக்கியத்துவத்தை சிங்கப்பூரர்களிடையே வலியுறுத்த விரும்புகிறார். நாட்டின் அமைதியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

img2

"68 வயதில், சிங்கப்பூர் ஆயுதப் படையினரால் அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டபோது, நான் இன்னும் தேவைப்படுகிறேன் என்று எண்ணும்போது; நான் பெருமையடைகிறேன்.”

 

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.