R சந்திரன்

திரு சந்திரனைப் பார்ப்போர்க்கு உடனே நினைவுக்கு வருபவர் சமூக ஆர்வலர் தந்தை பெரியார்தான். பெரியாரின் அடையாளச் சின்னமான அந்த நீளமான தாடி காண்பவரின் கவனத்தை கண்டிப்பாகக் கவரும். தோற்றம் ஒரு புறம் இருக்க, சந்திரனின் சமூகத் தொண்டு இவரைச் சிங்கப்பூருக்குப் பங்களித்த முன்னோடிகளில் ஒருவராக்குகிறது.

50முகங்களின் தோற்றத்திற்கு 78 வயது திரு சந்திரனே காரணம் என்றால் அது மிகை ஆகாது. தற்செயலாகச் சந்திரனையும் அவர் மனைவியையும் ஒரு கடைத் தொகுதியில் சந்தித்து, உதவி செய்ததைத் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவரது வாழ்கையைப் பற்றி அறிய வந்ததே 50முகங்களின் உருவாக்கத்திற்கு விதையாக அமைந்தது. அவரது கதை ஒரு சாதாரன சிங்கப்பூர் சமூகத்திற்கு அசாதாரண(அதிகப்படியான) தொண்டூழியம் ஆற்றியதற்கு மிகச் சிறந்த சான்று. தன்னலத்தை மீறி பிறருக்கு உதவுதல் சந்திரனுக்கு ஓர் இயல்பான செயல்.

“பெயருக்காக தொண்டூழியம் செய்யக்கூடாது, உண்மையிலேயே உழைக்கணும்.”

இளைஞராக இருக்கையிலேயே மற்றவர்க்கு உதவுவதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் சந்திரன். எவரிடமும் இல்லை என்று சொல்லாதவர் இவர். சமூகத்திற்கு மேலும் தொண்டாற்ற வேண்டும் என்ற வேட்கை (ஆர்வம்) இவரை இந்தியாவின் அரசியல் கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகத்தின் சிங்கப்பூர் கிளையில் சேரத் தூண்டியது. தமிழ் மொழியையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்தவும் சமூக பண்புகளை எடுத்துக் காட்டவும் சந்திரன் தன் சக கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடகங்களை மேடை ஏற்றி வந்தார். எடுத்த தொடங்கிய வேலையை முடிக்காமல் உணவும் உறக்கமும் கொள்ள மாட்டார். என்று சக உறுப்பினர்களின் பெரும் மதிப்பை பெற்று இருந்தார். ஆனால் தான் கடமையைத்தான் செய்ததாக தன்னடக்கடத்துடன் கூறுவார். இப்பெருமையைத் தட்டிக் கழித்தார் சந்திரன்.

“எந்த ஒரு தொண்டு செய்தாலும், நான் உண்மையிலேயே செய்வேன், யாரையும் ஏமாற்றமாட்டேன்.”

சந்திரனின் நினைவாற்றல் முன்பு போல் இல்லை. தான் இருந்த அமைப்புடனோ தானாகவோ இந்தியச் சமூகத்திற்கு அவர் செய்த பல உதவிகளின் விவரங்களை அவரால் நினைவு கூற முடியவில்லை. ஆனால் அவர் வாழ்நாளின் பெரும் பகுதியை சமூக பணிகளுக்கு அவர் அர்ப்பணித்துள்ளார் என்பது தெளிவாகிறது. சிங்கப்பூர் மூன்றாம் உலக நாடாய் இருந்து முதலாம் உலக நாடாக உயர உழைத்த தலைமுறையில் தான் பங்காற்றியதில் பெருமை கொள்கிறார் சந்திரன். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்ததற்கு முன்னாள் முதலமைச்சர் திரு லீ குவான் யூ அவர்களைப் பெரிதும் பாராட்டிப் பேசினார் அவர்.

இன்று சந்திரன் தன் மனைவியுடன் ஒரு சிறு வீட்டில் வாழ்ந்து வருகிறார். நகர்வதற்கு உதவி தேவைப்படும் நிலையில் இருந்த போதிலும் தன் வீட்டை மிகச் சுத்தமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இருந்தும் மன தளர்ச்சியோ உடல் சோர்வோ இன்றி இருக்கிறார். கலகலப்புடன் உரையாடும் இவருடன் பேசுவோர், உதவி நாடுவோர்க்கு தன்னிடம் இருப்பதை சிறிதும் யோசிக்காமல் கொடுப்பார் என்பதை உணர்வார்கள். 50முகங்கள் சந்திரனுக்குத் தலை வணங்குகிறது.

“நான் இறக்கும்போது, எனக்குக் காசே இருக்கக்கூடாது.”

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.