ம தங்கராசன்

யார் இவர்? பதினைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியே இன்றும் இருக்கிறார்; அதே மாதிரியான முழுக்கைச்சட்டையும், உடையணியும் பாங்கும், நளினமும் மாறவேயில்லை. தமிழ்சார்ந்த மாநாடுகள், அறிவார்ந்த கூட்டங்களில் குறைந்தது மூவரோடு காட்சியளிப்பார். மற்றவரைவிட சற்று உயரம் குறைவு. வாவெடுத்த, வழுக்கையிலா, அடர்த்தியான வெள்ளைமுடி, கட்டாத பல்... ஆம் பற்கள் இல்லை! ஆனாலும் தெளிவான பேச்சு! பேசுவது தமிழன்றோ!

யார் இவர்? சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ‘நூல்கள் பட்டியலின்படி’ 39 தமிழ்ப் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். வெறும் ஆசிரியர் எனாது ‘தமிழாசிரியர் தங்கராசன்’ என்று சொல்வதில் பெருமை கொள்பவர்.

img1

எழுத்தாளர், ஆசிரியர், சமூகத் தொண்டர் என்று மூன்று பரிமாணங்களை ஐயா, மு தங்கராசன் திருவாளரிடம் காணமுடிகிறது. அவரின் (2014) அகவை 80! சிங்கப்பூரின் வளர்ச்சியைப் படிப்படியாகக் கண்டவர்; தமிழ் இலக்கியம் படைத்தவர்; சமூகத் தொண்டர்.

அன்றைய சிங்கப்பூர் கிராமப்புற வாழ்க்கையாக இருந்தது. தோட்டப்புறமாகக் காட்சியளித்த அன்றைய மலேசியா எப்படி இருந்ததோ, அதே மாதிரி சிங்கப்பூர் இருந்தது. மலாயாவின் ஒரு மாநிலம் தானே சிங்கப்பூர்! சிங்கப்பூரில் பல தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இருந்தன. மொழிவாரியாக தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, மலாய்ப்பள்ளி என இருந்தன. எல்லாப் பாடங்களும் அந்தந்த மொழிகளில் கற்பிக்கப்பட்டன. மக்களை ஒருங்கிணைக்க, ஆங்கிலம் தேவைப்பட்டது.

அன்று, சிங்கப்பூரின் பெருமதிப்புக்குரிய பெருந்தலைவர் திரு லீ குவான் யூ, “அடுத்த 20 ஆண்டுகளில் நான் சாதித்துக் காட்டுகிறேன்!” என்று சொன்னாராம்.

“இன்னும் இருபது ஆண்டுகளில் சிங்கப்பூரில் குடிசைப்புற வாழ்க்கை, தோட்டப்புற வாழ்க்கை இருக்காது, கிராமப்புற வாழ்க்கை இருக்காது என்று திரு. லீ குவான் யூ சொன்னார்.”

‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பதே எழுத்தாளர் தங்கராசனின் முதல் படைப்பு. ஆசிரியராக ஆகும் முன்பு, ஆசிரியர் ஆயுத்தப் பயிற்சியில் இருக்கும்பொழுது, இவர் எழுதிய நாடகம், இரண்டு மணிநேர படைப்பாக அரங்கேறியது. ஆனால், 1956ஆம் ஆண்டு தமிழ் முரசில் வெளிவந்த ‘வஞ்சகிதானா’ என்ற சிறுகதையே , அவரை ‘எழுத்தாளர்’ என அங்கிகரிக்கப்பட வைத்தது. அதுவே அவரின் முதல் எழுத்துத்துலக பிரவேசமாகும்.

அதன் பிறகு பல புத்தகங்கள். சிறுகதை, நாடகம், கவிதை என இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.

மாணவர்கள் கட்டுரைத் தொகுப்பு (தமிழ் / ஆங்கிலம்--மொழிபெயர்ப்பு) உட்பட சுமார் 39 படைப்புகள். கற்பனை மலர்கள், பூச்செண்டு, பொய்கை பூக்கள், மலர்க்கூடை, மலர்க்கொத்து, மகரந்தம், மணங்கமழும் பூக்கள், சூரியகாந்தி என பூ சார்ந்த தலைப்புகளாக இருக்கின்றனவே என்று ஒருவர் கேட்டதற்கு, எழுத்துலகம் என்ற இலக்கிய மலர்தோட்டத்தில் தம் “நூல்களும் மணக்கட்டுமே என்று வைத்தேன்,” என்றாராம்.

img1

“1956-ஆம் ஆண்டு தமிழ்முரசில் வெளிவந்த “வஞ்சகிதானா” என்ற சிறுகதைதான் என்னுடைய எழுத்துலக பிரவேசம்.”

ஜப்பானியர், வெள்ளையர் காலனித்துவம், ஒன்றுபட்ட மலாயா என்று மூன்று ஆட்சிக் காலக்கட்டங்களைப் பார்த்தவர். 80 வயதைத் தொடும் இவர், இந்தியாவின் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தார்.

‘அவா’ என்று அழைக்கப்படும் தம் பாட்டியுடன் சுமார் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது மலாயாவுக்குப் பயணமானார். அன்றைய முறையில் கோயிலில் ‘அ’ என்று மணலில் எழுத ஆரம்பித்து தமிழாசிரியர் பணிக்கு வரும்வரை, எல்லாம் தமிழிலேயே படித்தார். சில ஆண்டுகள் ஆசிரியர் பணி. சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்து ஆசிரியர் பணியையும், எழுத்துப்படைப்புகளையும், சமூகத் தொண்டையும், சிங்கப்பூரில் தொடர்ந்தார்.

ஆசிரியராக, பள்ளி முதல்வராக, பாடத்திட்ட அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் இருந்து, ஓய்வும் பெற்றுவிட்டார். 2012யில் ‘வாழ்நாள் நல்லாசிரியர் சாதனை விருதை’ தமிழ்முரசும், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கமும் கொடுத்துச் சிறப்பித்தது.

img1

“எல்லாருக்கும் உணர்வுகள் இருக்கலாம். ஒரு வெறித்தனம்... அந்த மாதிரியான ஒரு ஈடுபாடு எனக்கும் இருந்தது. என்னைப்போல ஒரு சிலருக்கும் இருந்தது.”

செம்பவாங் தமிழர் சங்கத்தில் செயலாளராக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். செம்பவாங் தமிழர் சங்க தமிழ்ப்பள்ளியின் உயர்நிலை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிதி சேர்ப்பதில் அவரின் பங்கு அதிகம். செம்பவாங் தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர், சங்கத்தின் செயலாளர் பொறுப்பு என இரண்டு கடமைகள் அவரது எழுத்துப்படைப்புகளுக்கு 12 ஆண்டுகள் வனவாசம் வைத்துவிட்டதாம்! இருப்பினும், மாணவர்களுக்கும் ஆர்வம்கொண்ட குழுக்களுக்கும், நாடகங்கள் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார்.

தமிழாசியர் மு தங்கராசன் அவர்களின் ஆசிரியர் பணி முற்றுபெற்று, எழுத்துப்படைப்புகளும் சமூகத் தொண்டும் தொடர்கின்றன.

“அந்த எழுச்சிகள் மாறவில்லை. எண்ணங்கள் மாறலாம்! எழுச்சிகள் மாறலாமா?”

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.