C V நாதன்

“அன்பெனும் அமுதூட்டும் அன்னை, அது அறிவூட்டி ஆளாக்கும் உன்னை.” என்ற பாடல் தான் நினைவுக்கு வரும் திரு C.V. நாதனின் வாழ்க்கை கதையை கேட்கும் பொது. பெற்றோரும் உறவினர்களும் ஒருவரின் மனநிலையில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு நாதன் நல்ல எடுத்துக்காட்டு. தன் பெற்றோரின் சமூக தொண்டினை மிகுந்த ஆர்வத்துடன் இவ்வாறு நினைவு கூர்ந்தார் நாதன். நாதனின் தந்தை திரு உ.செல்லப்பன் சிறந்த சீர்திருத்தவாதி. மது அருந்தவோ, புகை பிடிக்கவோ மாட்டார். அன்றைய அரசு குடியிருப்பில் நாட்டாமையாக சேவையாற்றினார். அவரது தாயார் பசித்தோருக்கு உணவு அளித்தார். பெற்றோரின் மனிதநேயம் தன் சிந்தனையில் ஆழமாக பதிந்ததாகவும் தான் தொழிற்சங்கத்திலும் சமூகதொண்டிலும் ஈடுபட ஒரு காரணமாக இருந்ததாகவும் நாதன் கூறினார். தன் தாய் மாமன், திரு ஆ.மாணிக்கம் ஒரு சிறந்த பேச்சாளர். அலேக்சேன்ரா, ஆன்டர்சன், தியோங் பாரு வட்டாரங்களில் தன்னுடைய தமிழ் பணிக்காகவும், சிறந்த பேச்சாற்றலுக்காகவும் தமிழ் காவலர் என்ற பட்டப்பெயர் பெற்றவர். மாமாவின் தமிழ் ஆற்றல் நாதனுக்கு தமிழில் ஆர்வம் ஏற்படுத்தினாலும் அவர் தமிழ் கற்கும் வாய்ப்பு அமையவில்லை. அவர் படித்த பள்ளிகள் ஒன்றன்பின் ஒன்றாக மறுசீரமைக்கப்பட்ட பொது அவர் மாறிய பள்ளிகள் பலவற்றில் தமிழ் கற்பிக்கப் படவில்லை. 25 வயதில் அவர் தந்தை மெதுவாக பார்வை இழந்த பிறகு படுத்த படுக்கையானார். அவர் தந்தைக்கு தமிழ் முரசு நாளிதழ் படிக்க பிடிக்கும் என்பதை அறிந்து அவருக்கு நாளும் தமிழ் முரசை படிக்க ஆரம்பித்தவர், நாளடைவில் சிரமப்பட்டு தன் தமிழ் வளத்தை வளர்த்து கொண்டதுடன் கவிதைகளும் புனைய தொடங்கினார்.

img1

“எங்கே ஒரு தாள் இருந்தாலும் அதுல தமிழ் இருந்தால் அதை படிக்காம இருக்க மாட்டேன்.”

18 வயதில் தேசிய சேவையின் விழிப்பு படைப்பிரிவில் சேர்ந்தார். நன்நடத்தை, பொறுப்புணர்ச்சி சிறந்த பங்களிப்பு காரணங்களால் மிக விரைவில் பதவி உயர்வுகளை தொடர்ந்து பெற்று 12 வருடங்களில் துணை கமாண்டன்ட் (Commandant) நிலையை அடைந்தார். 1970தில் ஜூரோங் துறைமுகத்தில் சேர்ந்தார். 6 மாதத்தில் அவரின் மேற்பார்வையாளர் அவரின் ஆங்கில வளத்தை கண்டு, தொழிற்சங்க செயற்குழுவில் சேர அழைத்தார். விரைவில் தொழிற்சங்க தலைவர் தேர்தலில் நின்று புதியவராக இருந்தபோதிலும் நல்ல பெரும்பான்மையில் வென்றார். தொடர்ந்து 45 ஆண்டுகள் தலைவராக பணியாற்றினார்.

தொழிலாளர் உரிமைகளுக்காக தைரியமாக போராடினார். மற்ற தொழிலாளர்களிடம் மிகுந்த மரியாதையாக நடப்பதுடன் அவர்களின் தேவைகளையும் உணர்சிகளையும் புரிந்து கொண்டதுடன் தொழிலாளர் முதலாளிகளுடன் உறவை மேம்படுத்தினார். தொழிற்சங்கத்திற்காக நிதி ஒன்றை அமைக்க முதலாளிகளை தூண்டி வெற்றி பெற்றார். அந்நிதியில் இருந்து தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதி, சிரமத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உதவி தொகை, ஊழியர் குடும்பத்தினரின் ஈம காரியங்களுக்கு நிதி போன்ற உதவிகள் அளிக்கப்பட்டது. இந்த பழக்கங்கள் இன்றும் நடப்பில் உள்ளன.

img1

“என்னை மாஃபியா என்று அழைப்பார்கள். நான் யாருக்கும் பயப்படமாட்டேன்.

1980யில் ஜூரோங் கூட்டுறுமை சங்கத்தில் சேர்ந்தார். SASCO நிறுவனத்தில் உறுப்பினராக பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது. குறைந்த வருமான குடும்பங்கள் பல முதுயோர்களை பராமரிப்பதில் சிரமப்பட்டனர். முதியோர்களை பராமரிக்க வழியிருந்தால் குடும்பத்தில் இருப்பவர் வேலைக்கு சென்று மேலும் சம்பாதிக்க முடியும். இந்த சூழ்நிலையில் தான் நாதன் புளோக் 30 திலோக் பிலாங்காவில் ஒரு முதியோர் இல்லத்தை தொடங்கினார். இப்பொழுது முதுயோர் இல்லத்துடன் 3 பகல் நேர பராமரிப்பு நிலையங்களையும் நடத்தி 200 முதியோர் பலனடைய செய்கிறார். செல்வந்தர்களிடம் நிதி உதவி கோரினார். SASCO பேரங்காடி மற்றும் துறைமுக தொழில் ஒன்றில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி இந்த இல்லங்கள் மற்றும் 4 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மேம்பாட்டு வகுப்புகள் போன்றவை நடத்த பயன்படுத்துகிறார். அரசாங்க நிதி உதவியையும் நாடுகிறார்.

img2

"குறைந்த சம்பள ஊழியருக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் உதவ எடுத்த முயற்சி.”

நமது அரசாங்கம் பல உதவிகளை செய்வதாக கூறும் நாதன், நமது அரசு உலகில் தலைசிறந்த அரசு என புகழாரம் சூட்டுகிறார். 11 வயதிலிருந்தே திரு லீ குவான் யூவின் பேச்சாற்றலுக்கு பெரும் விசிறி நாதன். நாணயத்தின் இரு பக்கம் போல் அரசு சட்ட திட்டங்கள் சில, சிலருக்கு பொருந்தும் சிலருக்கு பொருந்தாது.

தன் மனைவி தனக்கு கிடைத்த வரம் என்கிறார் நாதன். தான் செய்யும் பொது தொண்டுகளையோ அவற்றில் தான் அதிக நேரம் செலவளிப்பதையோ அவர் எந்த கேள்வி கூட கேற்பதில்லை. அவரின் மணைவி காட்டிய புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, அரவணைப்பு, நம்பிக்கை ஆகியவையே அவர் பொது தொண்டில் அதிக ஈடுபட உறுதுணையாக இருந்ததாக கூறுகிறார். அவர் மகள், நிஷாலினி கற்றல் குறைபாடு (Autistic) கொண்ட குழந்தைகள் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். கடினமான வேலையாக இருந்தாலும் வேறு வேலைக்கு செல்லாததுக்கு காரணம் தன் தந்தை நாதனின் முன்னுதாரணமே என்று கூறுகிறார்.

"ஒவ்வொரு மனிதனும் மனித நேயத்தை புரிந்து கடைபிடிக்க வேண்டும்.”

ஒருவரின் சமூக உணர்வுக்கு பெற்றோர் ஆற்றும் முக்கிய பங்கிற்கும் கடின உழைப்பிற்கும் சமூக தொண்டிற்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் C V நாதனின் கதையை சித்தரிப்பதில் 50முகங்கள் பெருமை கொள்கிறது. விடை பெறுமுன் அடுத்த தலைமுறை இளையர்களுக்கு இந்த கவிதயை சமர்பித்தார் நாதன்.

img2

"இளையர்களாகிய நீங்கள் சின்ன சிங்கங்கள் எப்படி சீர்பாய்ந்து ஒடுமோ, அதுபோன்று தமிழை வளருங்கள்.”

 

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.