B ரெங்கராஜூ

'வாழ்க்கையின் வெற்றிகளையும் தோல்விகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதை அவரது பிள்ளைப் பருவமே நிர்ணயிக்கிறது'- ஹரால்ட் ரமிஸ்.

திரு ராஜுவின் பிள்ளைப் பருவம் மிகச் சிறந்த ஒன்றாக அமையாவிட்டாலும், அவரிடையே மனதிடத்தையும் உறுதியையும் ஏற்படுத்தி, வளர்ந்து பெரியவரானப் பிறகும் வாழ்க்கையில் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற அது உதவியுள்ளது.

திரு ராஜூ, தமது எட்டு வயதில் எல்லாப் பிள்ளைகளையும் போல உல்லாசமாகத் தொடக்கப்பள்ளி்க்குச் செல்ல ஆரம்பித்து, பி.எஸ்.எல்.இ தேர்வுகளுக்குப் பிறகு பீட்டி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அப்பொழுது மாணவக் குண்டர் நடவடிக்கைகளுக்குப் பேர்போனப் பள்ளியாகத் திகழ்ந்த பீட்டி உயர்நிலைப் பள்ளி, திரு ராஜூவுக்கு உகந்த இடமாக அமையவில்லை. மாணவப் பருவத்தின் பெரும் பங்கைச் சண்டை சச்சரவுகளிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளச் செலவழித்ததால், அவரால் முதுநிலை கேம்பிரிட்ஜ் தேர்வுகளிலும் சரியாக மதிப்பெண்களைப் பெற முடியாமல் போய்விட்டது. இப்படி வாழ்க்கையில் திக்குத் திசையின்றி பயணித்துக்கொண்டிருந்த திரு ராஜூவின் வாழ்க்கையின் திருப்புமுனையாக அவரது தந்தையின் மரணம் அமைந்தது. இந்த எதிர்பாராத சம்வத்தால் தாயையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் திரு ராஜூ தள்ளப்பட்டார். இப்படி சந்தர்பச் சூழ்நிலையால், எந்த பொறுப்புமின்றி சுதந்திரமாகத் திரிந்த திரு ராஜூ காவல் படையில் கான்ஸ்டபிளாக வேலைக்குச் சேர்ந்தார்.

 

"நமது மறைந்த முன்னால் பிரதமர் திரு லீ குவான் யூவின் வீட்டு காவலில் ஈடுபட்டோரில் நானும் ஒருவன் என்பதை மிகுந்த கௌரவத்துடன் பெருமையுடன் இன்றும் கூறுவேன்."

குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கவேண்டியச் சூழலை நன்கு புரிந்துக்கொண்டு தமது வேலையிடத்தில் தம்மை முன்னேற்றிக்கொள்ளத் திரு ராஜூ முற்பட்டார். கான்ஸ்டபிலாக வேலைக்குச் சேர்ந்த பிறகு, நேரத்தை சரியாக வகுத்துக்கொண்டு மாலை வகுப்புகளுக்குச் சென்று படிப்பை கைவிடாமல் தொடர்ந்தார். அவரது கடின உழைப்பும் மன உறுதியும் கான்ஸ்டபில் பதவியிலிருந்து இன்ஸ்பெக்டர் என்ற காவல் அதிகாரி பதவிக்கு உயர்த்திவிட்டது. ஆனால் இப்படி பல பதவி உயர்வுகளுக்குப் பிறகும் திரு ராஜூ தமது வெற்றிப் பயணத்தை அப்படியே நிருத்திக்கொள்ளாமல், தமது வாழ்நாள் கல்வி வேட்டையைத் தொடர்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமது சட்டப் படிப்பை முடித்தார். பல வருடங்களுக்குப் பிறகு, வகுப்பிலேயே அதிக வயதுடைய மாணவனாக 1999-இல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தமது முதுநிலை சட்டப் படிப்பை முடித்து சாதனைப் படைத்தார்.

திரு ராஜூவுக்கு கல்வி என்பது ஒரு பயணம் போன்றது. வாழ்க்கையின் கடைசி மூச்சு வரைக்கும் கற்றலை நிறுத்தாமல் இருக்க உறுதியுடன் செயல்படுகிறார். அவரது கல்வி தகுதியாலும் சட்ட துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும் திரு ராஜூ காவல் துறையிலிருந்து வழக்கறிஞராக சட்டத்துறைக்கு மாறினார்.

"எந்த ஒரு தொழிலிலும், மேலும் முன்னேற ஒருவருக்கு அதிக ஆர்வம் இருக்கவேண்டும்."

வழக்கறிஞராக திரு ராஜூ தனது மனசாட்சியின் படி முடிந்தளவு மக்களுக்கு உதவ இயன்ற வரை முயன்றார். சட்ட சங்கத்தின் உறுப்பினராக இருந்தபோது, சிங்கப்பூர் பயனீட்டாளர் கழகத்தை தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுதலுக்கு இணங்கி அக்கழகத்தில் தொண்டூழியராக பணியாற்ற ஆரம்பித்தார். அன்று இலவசமாக சட்ட சேவைகளை வழங்க ஆரம்பித்த அவர், தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் சமூக மன்றங்கள் சட்டமன்றங்கள் போன்ற இடங்களிலும் சேவைகளைப் புரிய ஆரம்பித்தார். தமது அறிவுறையைக் கேட்க வருபவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காணும்போது, திரு ராஜூவுக்குப் பெரும் மனநிம்மதியும் மேலும் தம் தொண்டூழியத்தைத் தொடர உற்சாகமும் கிடைத்தது.

"பணபலம் படைத்தவர்களிடம் கட்டணம் வாங்கியும் ஏழை எளியோருக்கு இலவசமாக சேவை வழங்கியும் அனைவருக்கும் உதவினேன்."

சமூகத்தின் பலத் தரப்பினரிடையேத் தமது சேவைகளை இலவசமாக வழங்க ஆரம்பித்தார். ரடின் மாஸ் சமூக மன்றத்திலும் டிபாட் சாலையிலுள்ள ஸ்ரீ ருத்திர காளியம்மன் கோயிலிலும் சட்ட நிலையத்தை ஆரம்பித்து இலவசச் சட்ட ஆலோசனைகளை அவர் வழங்கினார். 20 வருடங்களாக ரடின் மாஸ் சமூக மன்றத்தில் சேவையாற்றிய அவர், அம்மன்றத்தின் செயற்குழுவின் துணைத் தலைவராக பதவிவகி்த்தபோது அடுத்த தலைமுறைக்கு இடங்கொடுக்கத் தாமாகவேப் பதவிவிலகினார். தற்போது, செயற்குழுவின் உறுப்பினராகத் தொடர்ந்து ஸ்ரீ ருத்திர காளியம்மன் கோவிலில் தமது உதவியை வழங்கி வருகிறார். செப்டம்பர் மாதத்தில் இடம்பெறும் கும்பாபிஷேகத்திற்காக நேரத்தைச் செலவழித்து வருகிறார்.

திரு ராஜூவின் பொறுப்புகள் இவ்வளவுதான் என்று நினைத்துவிடாதீர்கள். மரணத் தண்டனையை எதிர் நோக்கும் குற்றவாளிகளுக்கு வழக்கறிஞராக, உச்ச நீதிமன்றத்தின் சட்ட உதவிக்கொடை திட்டத்தின் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

"என்றும் இரண்டு அம்சங்களை கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று, உடற்பயிற்சி மூலம் திடமான உடல். மற்றொன்று, நமது அறிவு."

ஆரம்பத்தில் பின்தங்கியிருந்தாலும் பிறகு வாழ்க்கையில் சிறப்பாகத் தேறி அனைவரும் போற்றக்கூடிய வாழ்க்கையை வாழ்ந்து, விதியை மதியால் முறியடிக்க முடியும் என்பதைத் திரு ராஜூ நிரூபித்துள்ளார். கற்றலும் கல்வியும்தான் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உகந்தது என்பதைச் சரியாக உணர்ந்து பலத் தடங்கள்களை வென்று இவர் சாதித்துள்ளார். இருப்பினும், தாம் கடந்து வந்த பாதையை மறக்காமல் சமூகத்திலுள்ள ஏழை எளியோரின் துன்பத்தை அகற்றத் தம்மால் முடிந்த உதவியைப் புரிந்து தன்னிகரற்று திரு ராஜூ திகழ்ந்து வருகிறார். தொடரந்து வெற்றிகரமாகச் சட்ட துறையில் அவரது ஈடுபாடும் அறப்பணியும் தொடர 50 முகங்கள் குழு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.