செங்காங் பகுதியில், அமைதியான சுழலில் ஸ்ரீ அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள், நாள் தவறாமல் தமது பணிகளை அமைதியாகச் செய்து வரும் இக்கோவிலின் தலைவரான திரு A J பால் அவர்களை நிச்சயம் பார்த்திருப்பார்கள். மூன்று வெவ்வேறு கோவில்கள் ஒன்றாக இணைந்துள்ளதைப் பிரதிபலிக்க, இந்த விந்தையான கோவிலிலுள்ள இரண்டு பிரதான விக்கரங்கள் விசேக்ஷ அம்சமாகக் காட்சியளிக்கின்றன. இதனால், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் இக்கோவிலுக்கு ஈர்க்கப்படுகின்றனர். 1953றில் தமது பதின்மூன்றாவது வயதில் சிங்கப்பூர்க்கு வந்து தமது கல்வியைத் தொடரலாம் அல்லது வேலை வாய்ப்பினைப் பெருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வந்தார் திரு பால். ஆனால், இங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. தமக்கு அதிகமான ஓய்வு நேரம் இருந்ததாலும், இங்குள்ள மற்ற இனத்தவர்களின் ஒற்றுமை மற்றும் அவர்கள் குழுக்கள் அமைத்து தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ததைப் பார்த்ததாலும், திரு பால் மற்றும் பல இளைஞர்கள் சிங்கப்பூர்த் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) சேர உற்சாகம் பெற்றனர். இக்கழகம் இந்தியாவின் அரசியல் கட்சி போன்று இருந்தாலும் அதன் முக்கிய நோக்கு சிங்கப்பூர் இந்தியர்களுக்குச் சமுதாயச் சேவையை வழங்குவதாகும். |
திமுக, புகழ்மிக்க அரசியல்வாதி மற்றும் திறம்மிக்க பேச்சாளருமான சி ந அண்ணாதுரை அவர்களை தோக்கியோ செல்லும் வழியில் சற்று நேரம் சிங்கப்பூருக்கு வருகைத் தரும்படி செய்தனர். அவர் பன்னிரண்டாயிரம் இந்தியர்களுக்கு ஜாலான் புசார் அரங்கத்தில் உரையாற்றினார். திமுகவில் ஓர் அங்கமாக இருப்பதில் உண்மையாகவே சிறப்புமிக்கது என்றும் அதில் இருந்த ஏராளமான தொண்டூழியர்கள் ஏதேனும் ஒரு வழியில், சிறிதாக இருப்பினும் சேவை வழங்க முயற்சித்தனர். |
|
“மக்கள் அவர்களால் இயன்றளவு வழங்குவார்கள் அல்லது கை கொடுப்பார்கள்.” |
சிறிது காலத்திலேயே திமுக கலைக்கப்பட்டு சிங்கப்பூர்த் தமிழர் இயக்கமாகச் சீர்படுத்தப்பட்டது. இதன்மூலம், இவ்வியக்கம் இந்தியாவின் திமு கழகத்திலிருந்து பிரிந்தது. இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையே இருந்த இறுக்கம் ஆரம்பித்து, சமீப குண்டு வெடிப்பினால், நிறைய அக்கம்பக்கக் கண்காணிப்புக் குழுக்கள் தொண்டூழியர்களால் தொடங்கப்பட்டன. இக்குழுக்கள் மக்கள் நெரிசல் ஏற்படும் கோவில்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களைக் கண்காணித்தன. இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதிய திரு பால், ஜாலான் காயு கண்காணிப்புக் குழுவில் தொண்டூழியராகச் சேர்ந்தார். 1960களின் பிற்பகுதியில், கண்காணிப்புக் குழுக்கள் குறைந்து கொண்டிருந்த வேளையில், குடிமைத் தற்காப்புப்படை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. திரு பால் அதில் பகுதி நேரமாகச் சேர்ந்து, ஆறு மாதத் தீவிரப் பயிற்சியை இஸ்ரேல் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பெற்றார். சிங்கப்பூரில் ஆண்களுக்கான தேசிய சேவை முதன்முதலில் தொடங்கப்பட்டபோது, அதன் புது வீரர்களுக்குப் பயிற்சிவிப்பாளராகப் பொறுப்பேற்றார் திரு பால். கடினமாக இருப்பினும், அவர் பெற்ற பயிற்சி அப்போது பயன்மிக்கதாக அமைந்தது. இவை அனைத்தையும் கடந்த திரு பால், தொண்டூழியத்தில் தமக்கு இருந்த ஆர்வத்தை மறந்ததில்லை. அவரது தினசரி கால அட்டவணையில் கோவிலுக்குச் சேவையாற்றுவதைப் புகுத்திக்கொண்டார். |
|
“எங்கள் ஒரே எண்ணம், எப்படி எங்கள் நேரத்தை முழுமையாக நற்செயல்களுக்கு அற்பணிக்கலாம் என்பதேயாகும்.” |
77 வயதில், பணியிலிருந்து ஓய்வுப்பெற்று வாழ்க்கையைச் சந்தோஷமாகச் செலவழிக்க வேண்டிய காலத்தில், திரு பால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே தம் வாழ்க்கை மகிழ்வடைகிறது என்கிறார். கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்து அதன் நிர்வாகத் தலைவரான அடக்க குணமுள்ள திரு பால், கோவிலுடன் முழுமையாக இணைந்துள்ளார். அவர் எளிய வாழ்க்கையை நடத்துகிறார். தமது அங் மோ கியோ இல்லத்திலிருந்து தினமும் கோவிலுக்கு வந்துவிடுவார். கோவிலில் தேவைப்படும் சீரமைப்புப் பணிகளைக் கவனித்து, சிற்சில பராமரிப்பு பணிகளையும் செய்து, கோவில் வளாகத் தோட்டத்தைக் கவனித்தப் பிறகே அலுவலக பணிகளை மேற்கொள்வார். கோவில் மூடும் வரையிலும் அங்கிருப்பதுடன் ஏதேனும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வார். மற்றவர்களுக்கு உதவி புரியும் ஆர்வம் அவருக்குள் எப்போதும் நிறைந்துள்ளது. இதனை அவரது தினசரி வாழ்க்கையிலும் வேலையிலும் செயலாற்றிவருகிறார். அவர் குடியிருந்த வீட்டை விற்று, கோவிலின் கட்டட நிதிக்கு வழங்கினார்(சிறிய தொகை அல்ல). திரு பால் அப்பணத்தைத் தமது ஓய்வுக் காலத்திற்குப் பயன்படுத்தாமல், தம் பிள்ளைகளுக்கு அல்லது பேரப்பிள்ளைகளுக்குச் சொத்தாகவும் வழங்காமல் கோவிலுக்கு மனமுவந்து வழங்கினார். இவை அனைத்தும் தமது குடும்பத்தினரின் ஆதரவினாலேயே சாத்தியமடைந்தது என்றார் திரு பால். வீட்டில் இருந்துகொண்டு நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்ப்பதைவிட, திரு பால் சுறுசுறுப்பாக இருப்பதையே அவரது குடும்பத்தினர் விரும்புவதாகக் கூறினார். |
|
“நான் விட்டுச் செல்லக் கூடிய ஒரே சொத்து, கடவுள்.” |
இறுதியில் தாம் சாதித்த அனைத்தும் கடவுளுக்கே உரிய புகழ் என்றும் அவரது கருணையால் தாம் உயிர் வாழ்கிறார் என்றும் உடல் நலனில் குறைவிருப்பினும் தாம் விரும்பிச் செய்வதைச் செய்ய முடிகிறது என்கிறார் திரு பால். கடவுள் அவரை நம்பி வந்தோரைக் கைவிடமாட்டார் என்பது திரு பாலின் நம்பிக்கையாகும். திரு பால் எல்லோரையும் கடவுளின் ஆதரவை நாடச் சொல்கிறார். கோவிலை முன்னேற்றி, பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் பல திட்டங்களுடன் இருக்கும் திரு பால், அதிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. 50முகங்களைச் சார்ந்த எங்கள் குழு அவரது அனைத்துத் துணிகரச் செயல்களுக்கும் வாழ்த்து நவில்கிறோம். வாசகர்களில் யாரேனும் தொண்டூழியத்தில் ஈடுபட ஒரு நல்ல வாய்ப்பினை எதிர்நோக்கிக் கொண்டிருந்தால், திரு பால் உங்களுக்கு உதவி வழங்குவதில் மகிழ்கிறார். |
|
“நான் கடவுளுக்கு ஆற்றும் சேவையையே அரிதெனக் கருதுகிறேன். இதுவரையிலும் நான் இதுபோன்று மன அமைதியடைந்ததில்லை.” |