வே உலகநாதன்

'குண்டராவதே எனது முதல் குறிக்கோளாக இருந்தது,' என்று தனது நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்கிறார் திரு உலகநாதன்.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக திரு நாதனின் இக் குறிக்கோள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தமது வாழ்க்கையில் சாதித்ததுடன் நில்லாமல், சமூகத்திற்கும் தமது பங்கை ஆற்றி பலரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகிறார்.

தியாங் பாரு கம்போங் கூறை வீடுகளில் ஆரம்பித்த திரு நாதனின் வாழ்க்கை, பிற குழந்தைகளைப் போலவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. பெற்றோர்களுடனும் தம்பியுடனும் இருந்த இடமும் வாழ்க்கை தரமும் சிறப்பாக இல்லையென்றாலும் யாருக்கும் அஞ்சாத நாதனின் சுதந்திர உணர்ச்சி என்றும் கொடிகட்டிப் பறந்தது.

ஆனால் இவை அனைத்திற்கும் திருப்புமுனையாக திரு நாதனின் தந்தையின் மறைவு அமைந்தது. திரு நாதனுக்கு அப்பொழுது ஒன்பது வயது. பிள்ளைகள் இருவரின் பசியை போக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திரு நாதனின் தாய்க்கு சில கடினமான முடிவுகளை எடுக்க நேர்ந்தது.

img1

“என்னுடைய குறிக்கோள் - ஒரு குண்டரா ஆகனும். அப்போதுதான் நினைத்ததை செய்யலாம், சுதந்திரமாக இருக்கலாம்."

ராமகிருஷ்ணா மடத்தில் அமைந்த புது வாழ்க்கை சுதந்திரமாக திரிந்த திரு நாதனுக்கு பெரும் சங்கடத்தைத் தந்தது. யாருக்கும் கட்டுப்படாத தம்மை அவரது எதிர்காலத்தை சீர்குழைக்க ஆரம்பித்தது. இத்தருணத்தில்தான் திரு நாதனின் தாயார் தலையிட்டார். இதுவே திரு நாதனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒழுக்கமின்மைக்காக அவ்வப்பொளுது கண்டிக்கப்பட்ட திரு நாதனை இப்பொழுது முன்னால் மாணவன் என்று பெருமையுடன் அவர் பயின்ற பள்ளி அழைப்பதற்கு இது வித்திட்டது. எந்த தாயாரும் பெருமைபடும் அளவிற்கு திரு நாதன் முன்னேறினார். வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்த திரு நாதனால் தமது தாயார் தம்மைப்பற்றி வருந்துவதை காட்டிலும் பெருமைப்பட ஆரம்பித்ததை கண்கூட பார்க்க முடிந்தது.

“இப்போதும் என் தாயார் சொன்னது நியாபகம் இருக்கு. பாரு நாதன் - இது மடம். இதோடைய பெயரை கெடுத்தால், நான் என் உயிரை விட்டு விடுவேன்."

திரு நாதனுக்கு கிடைத்துள்ள பல பதவிகளும் பாராட்டுகளும் அவரது வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதின் வேட்கையையும் மனந்தளராமையும் பிரதிபளிக்கின்றன.

தமது ஏ தகுதி நிலை தேர்வை முடித்துவிட்டு, சர்வதேச வியாபாரத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் படித்து முடித்தார். அதன் பிறகு, சட்டக் கல்வியிலும் பட்டப்படிப்பை முடித்து லண்டனில் வழக்கறிஞராகும் தகுதியைப் பெற்றார். தமது தம்பியின் படிப்புச் செலவுக்காகவும் திருமணமதிற்கு பின் தன் குடும்பத்திற்காவும் உழைத்துக்கொண்டிருக்கும்போதே இந்த முன்னேற்றத்தை இவர் பெற்றுள்ளார் என்பது பாராட்டக்கூடியது.

இந்த கடின உழைப்பும் உத்வேகமும் திரு நாதன் ராமகிருஷ்ணா மடத்தில் வளர்ந்தபோது கற்றுக்கொண்டவையாகும். சுவாமிஜி-களின் உற்சாகமூட்டும் பேச்சுகளும் நன்கொடையாளர்களின் தாராளமான நன்கொடைகளும் இவரைப்போன்று மடத்தில் வளர்ந்த பலரின் வாழ்க்கையை ஒளிமயமாக்கியுள்ளன. இதன் காரணத்தினாலேயே திரு நாதன் சமூகத்திற்கு உதவுவதை தமது கடமையாக எண்ணுகிறார். தாம் சிறுவயதில் பெற்ற உதவியை மறவாமல் அன்று தாம் இன்னலில் இருந்ததைப்போன்று இன்று இருக்கும் பலருக்கு தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் திரு நாதன் செயல்பட்டு வருகிறார். தமது முழு நேரப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், பல தர்ம காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

img1

“நான் பொது மக்களின் உதவியால் வாழ்ந்தேன். அதனால் எதாவது நான் சமுதாயத்துக்கு செய்யனும்."

நன்கொடைகளை கொடுப்பதுடன் நின்றுவிடாமல் மக்களுக்கு தம்மால் முடிந்த ஆலோசனையையும் உற்சாகத்தையும் அளித்து திரு நாதன் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார். சில சமயங்களில் தம்மை நாடி வரும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் போனாலும், தமது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் பலருக்கு நன்மை கிடைக்கிறது என்று திரு நாதன் நம்புகிறார். இவர் பொது நிறுவனங்களிலும் அறக்கொடை நிறுவனங்களிலும் நடத்தும் தன்முனைப்பு பட்டறைகள் மூலம் இதை சாதிக்கிறார். ஒவ்வொருவரும் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் அவரவர் திறமைக்கேற்ப வாழ்க்கையில் முன்னேறும் உத்தியை கற்றுத்தர இவர் விழைகிறார்.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மருத்துவராக வேண்டும் என்று இவருக்குள் இருந்த ஆசைதான் இந்த உதவும் மனப்பான்மையை கொடுத்திருக்க வேண்டும்.

img1

“ஒரு வகையில் நான் மருத்துவர்தான். உடல் நிலையை குண படுத்தும் மருத்துவர் அல்ல, மனநிலையை குண படுத்தும் மருத்துவர்."

எதிர்காலத்தில் இன்னும் பல சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தம்மால் முடிந்தவரை தமது சமூகப் பணியை தொடர திரு நாதன் விரும்புகிறார். ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கும் நோக்கத்துக்கும் தமது ஆதரவை அளிக்க இவருக்கு விரும்பமில்லை. அனைத்து சமூக வேலையை செய்யவும் எவர் உதவி கேட்டு வந்தாலும் உதவவும் தயாராக திரு நாதன் உள்ளார்.

தற்போது தமக்கு மிக நெருக்கமான மூன்று பேரக்குழந்தைகளின் படிப்பு தேவைகளைக் கவனிப்பதில் தமக்கு நேரம் சரியாக இருப்பதாக திரு நாதன் குறிப்பிட்டார். இருப்பினும், தமது நண்பர்கள் மற்றும் யாராக இருப்பினும், அவர்களுக்கு உதவுவதற்கு தனது நேரத்தை ஒதுக்குகிகிறார்.

சமூகப் பணி நிறைந்த திரு நாதனின் வாழ்க்கைப் பயணம் செம்மையாகத் தொடர  50முகங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.