வெ கிருஷ்ணன்

“ஏனென்றால் எனக்கு நம்பிக்கையுண்டு - வயது வரம்புகளை மீறி - நாம் ஒவ்வொருவரும் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு நமது பங்கை ஆற்ற முடியும்” - மிஷல் ஓபாமா

இந்தக் கூற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திரு. கிருஷ்ணன் தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை முதலுதவி சேவைக்கு அற்பணித்து சமூகத்திற்கு பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.

சிங்கப்பூர் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில், முதலுதவி துறையில் ஒருவர் தொண்டூழியம் செய்வது மிகவும் அரிது. ஆனால் திரு கிருஷ்ணனுக்கு எப்படி இதில் ஆர்வம் ஏற்பட்டது? சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வேலைபுரியும் தன் தாயின் பாத அடிகளை இளம் வயதில் திரு கிருஷ்னன் பின்தொடர்ந்திருப்பாரோ என்னவோ.

1939-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சியில் சிங்கப்பூர் இருந்தபோது இவர் பிறந்தார். தந்தையை சிறு வயதிலேயே பறிகொடுத்த இவர், அம்மா ஒருவரின் வருமானத்தில் கஷ்டத்துடன் வளர்ந்தார். இவர் தொடக்கநிலை கல்வியை ஆரம்பிக்கும் போது இவரது வயது பத்து. குடும்பத்தின் பாரத்தை சுமக்க வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இவரது இந்த கல்வி பயணம் நீண்டநாள் நீடிக்கவில்லை.

img1

“ரொம்ப கஷ்டமான வாழ்க்கை. ரொம்ப கஷ்டம்."

முதலுதவி சேவை என்பது திரு கிருஷ்ணனின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். இவர் தமது தாயார் வேலைப்புரியும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை செய்வதை நேரடியாக கண்டு முதலுதவி சேவை மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

ஊற்றம் பள்ளியில் பயிலும்போது முதலுதவி சேவையி்ல் திரு கிருஷ்ணன் மேலும் அனுபவம் பெற்றார். அவரது ஆர்வம் அதிகரிக்க பயாலேபரிலுள்ள சாரணர் படையில் சேர முடிவெடுத்தார். தினமும் தங்கிருக்கும் சைனாடவுனிலிருந்து பயாலேபர் வரை பயணிக்க நேரிட்டாலும், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. 1964 -இல் தனது தேசிய சேவையை சிங்கப்பூர் மருத்துவ சாரணராக பணியாற்றி முதலுதவி சேவை மீது தாம் வைத்திருந்த ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தினார்.

இதன் பிறகு45 வருடங்களாக செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் படையில் தொண்டூழியம் புரிய தொடங்கினார். இந்த காலகட்டத்தில், அவர் பல புதிய திட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் வித்திட்டார். முதலுதவி சேவையில் இந்தியர்களின் பங்கு குறைவாக இருப்பதைக் கண்டு,அவர்களிடம் சமூக உணர்ச்சியை அதிகரிக்க முற்பட்டார். அவர் துவக்கிய ஒரு திட்டம்தான் செயி்ன்ட் ஜான்ஸ் தமிழ் ஆம்புலன்ஸ் மற்றும் தாதியர் பிரிவாகும். அவர் இந்தப் பிரிவை ஆரம்பித்ததன் நோக்கத்தைப் பற்றி பேசும்போது,அவரது குரலில் சாதித்த உணர்வு தென்பட்டது.

“தமிழர்கள் ஏன் இருக்கக்கூடாது - என்ற வைராக்கியம் எனக்கு"

img2

திரு கிருஷ்ணன் சில வருடங்களுக்கு காவல் துறையில் பகுதிநேர தொண்டூழிய காவலராக செயல்பட்டார். எதுவாக இருக்கட்டும் திரு கிருஷ்ணன் தாம் செயலில் இறங்கும் அனைத்து காரியங்களிலும் சிறப்பாக செயல்பட முயல்வார். இந்த உழைப்பின் அங்கீகாரமாக இவருக்கு பல விருதுகளும் பாராட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

முதலுதவியின் முக்கியத்துவத்தை அக்கம்பக்கத்தாருக்கு பரப்புவதை தமது குறிக்கோளாக கொண்ட திரு கிருஷ்ணன், வேலை முடிந்தும் பல மணி நேரத்தை இதற்காக செலவிடுவர். இவரது இந்த நற்பணியை முடித்துவிட்டு தினமும் காலதாமதமாக வீ்ட்டிற்கு திரும்புவாராம். இதைக் கண்டித்து, இவரது தாயார் எதிர்காலத்தில் இவர் மனைவியும் செயின்ட் ஜான்ஸ் படையினராகத்தான் இருப்பார் என்று கூறியுள்ளார். இது இவரது வாழ்க்கையில் உண்மையாகவே நடந்துவிட்டது. திரு கிருஷ்ணன் தனது வருங்கால மனைவியை செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் படையில் தொண்டூழியம் செய்துக்கொண்டிருக்கும்போது சந்தித்தார்.

பல வருடங்களாக தொண்டூழியம் புரிந்துவந்த திரு கிருஷ்ணனின் வேலைப் பழு அவரது உடல் நிலையை பாதிக்க ஆரம்பித்தது. ஓய்வு பெற்றபிறகு திரு கிருஷ்ணனுக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் புறவழி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.தமக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்றவருக்கும் ஏற்படக் கூடாது என்று திரு கிருஷ்ணன் முதலுதவி பற்றிய விழிப்புணர்வை மேலும் தீவிரமாக பரப்ப முற்பட்டார்.

முதலுதவி மூலமாக பலரின் வாழ்க்கையை காப்பாற்றுவதே திரு கிருஷ்ணனுக்கு அளவில்லா உற்சாகத்தைக் கொடுத்தது. மற்றவற்களுக்கு முதலுதவி பயிற்சியளித்த இவரே ஆறு முறை உயிர்காப்பு முதலுதவி நடவடிக்கை செய்து பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

“பதற்றபட்டால் கொண்றிடுவோம்!"

“எதிர்காலம் நமது இளைஞர்கள் கைகளில் உண்டு,” என்று பெருமையுடன் இவர் கூறினார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இவரது தலைமுறையினர் ஆற்றிய பங்கை எடுத்துரைத்தார். தேசிய சேவையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இவர் எடுத்துக் கூறினார். “தேசிய சேவையின்போதுதான் வாழ்க்கையின் நியதிகளை ஒருவனால் புரிந்துக்கொள்ள முடியும்,” என்று உறுதியுடன் கூறினார்.

மேலும், ஓய்வு நேரங்களில் தொண்டூழியப் பணியில் ஈடுபட அனைவரையும் ஊக்கமளிக்கிறார். “ஆனால் என்னைப்போல் இருக்காதீர்கள்,” என்று புன்முறுவல் பூத்த முகத்துடன் கூறினார். தமது மனைவி தமக்கு ஆணிவேராக இருப்பினும், குடும்பத்திற்கும் சமூக சேவைக்கும் சம அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று திரு கிருஷ்ணன் வழியுறுத்தினார்.

தொண்டூழியம் என்பது மனதார வரவேண்டும் என்கிறார் திரு கிருஷ்ணன். 'வலுக்கட்டாயமாக ஒருவரை இதில் ஈடுபடுத்தினால் அவரது பங்கு நீண்ட காலம் நீடிக்காது'என்று அவர் விளக்கினார்.

img3

“மனசார வந்தால், அது நீடிக்கும்."

75வயது ஆகியும் திரு கிருஷ்ணன் தொடர்ந்து தமது தொண்டூழியப் பணியை ஆற்றிக்கொண்டு வருகிறார். இவர் யூஷூன் வட்டாரத்தில் நடத்தி வரும் முதலுதவி பயிற்சி நிலையத்தில் பலருக்கு இன்றும் பயிற்சி அளித்து வருகிறார்.

திரு கிருஷ்ணனைப் போன்று வாழ்க்கையின் பெரும்பங்கை தொண்டூழியத்திற்கு அற்பணிக்க வேண்டும் என்ற கட்டாயம் நம் அனைவருக்கும் இல்லை. ஆனால், இவரது இந்த உன்னத வாழ்க்கை கதையைப் படித்த அனைவரும் சமூக உணர்வோடு இனிமேலும் செயல்பட ஆரம்பிப்போம்.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.