லலிதா வைத்தியநாதன்

ஒருவர் பிறக்கும்போது எவ்வளவு திறமையுடன் பிறக்கிறார் என்பது முக்கியமில்லை. அந்த திறமையை சரியான சூழலில் வளர்த்து சாதிக்கிறாரா என்பதுதான் முக்கியம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு திருமதி லலிதா வைத்தியநாதன் என்றால் அது மிகையாகாது.
 
சிங்கப்பூர் இந்திய இசைக்குழுவை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்ற பெருமை இவரைச் சேரும். இந்த இசைக்குழுவின் இயக்குனராக சுமார் 30 ஆண்டுகள் தலைமைத்தாங்கி, நமது உள்ளூர் இசை துறைக்கு தமது பங்கை ஆற்றியுள்ளார்.
 
பாடகரான தமது அம்மாவின் ஊக்குவிப்பின் மூலம் இசைத் துறைக்கு மிக இளைய வயதிலேயே அறிமுகமானார் திருமதி லலிதா. இவரது தாயார் இவரை மட்டுமல்லாமல் தமது ஆறு குழந்தைகளையும் இசையின் அரவணைப்பில் வளர்த்து அவர்களது புகழுக்கு வித்திட்டார். திருமதி லலிதாவின் மூத்த சகோதரிகள் பரதநாட்டிய கலை வல்லுனர்களாக தேர்ச்சிபெற்றனர். மற்ற 2 சகோதரிகள் பாடகர்களாகவும் சகோதரர் ஒருவர் மிருதங்க வாசிப்பவராகவும் இசைத்துறையில் முக்கிய பங்காற்றியுள்ளனர். சகோத சகோதரிகள் அனைவரும் இந்திய கர்னாடக இசையைக் கற்றபோதிலும் புத்தாக்கச் சிந்தனையுடன் செயல்பட்ட திருமதி லலிதாவின் இசை குருக்கள் அவரை மேற்கத்திய இசையைப் பயில ஊக்குவித்தனர்.
 
பிள்ளைகளின் இசை ஆற்றலை வளர்ப்பதில் தாயார் கவனம் செலுத்த, செயின்ட் ஜான்ஸ் கல்வி நிலையத்தில் தலைமை அலுவலக எழுத்தாளராக பணிப்புரிந்த தந்தை அவர்களோ, பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தினார். ஆசிரியர் பணிமீது அவருக்கு இருந்த அதிக மரியாதை அவரது அனைத்து பிள்ளைகளும் ஆசிரியர் பணியை பின்தொடர்வதுக்கு வழிவகுத்தது. திருமதி லலிதா 1975-திலிருந்து 2000-வரை, சுமார் 25 வருடங்களாக கத்தோலிக் தொடக்கக் கல்லூரியில் இரசாயணவியல் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். கற்பித்தலின் ஆர்வமும் தொடர்ச்சியாக தம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு என்றும் இருந்தன.

img1

“முதல் முறையாக, 1979-இல் தேசிய இசைப் போட்டியில் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றோம்."

சிங்கப்பூரின் இசை துறைக்கு திருமதி லலிதா அளித்த பங்கு போற்றப்படக்கூடியது. தாம் வளர்ந்த 'கிர்க் டெரஸ்' வட்டாரத்தில் செயல்பட்ட வானொலி நிலையத்தில் தமது தாயின் ஊக்குவிப்புடன் பாடல்களை இயற்றிப் பாடிய அனுபவம் திருமதி லலிதாவுக்கு உண்டு. இவரது காலத்தில் வாழ்ந்த பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார் திருமதி லலிதா. குடும்ப பொறுப்பு, ஆசிரியர் பணி மற்றும் இசை மேலுள்ள நாட்டம் என்று தமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் திறமையாக சமாளித்து தன்னிகறற்று இவர் விளங்கினார். 1975-இல் தமது தாயாரின் மறைவுக்கு பிறகும், 1982 மற்றும் 1983-களில் பிள்ளைகளின் பிறப்பிற்கு பிறகும், 1983-இல் தந்தை உடல் நிலை குறைந்த பிறகும் இசை கச்சேரி பயிற்சிகளை தொடர்ந்து நடத்திவந்தார். இப்பயிற்சிகளை 'கெர்ட்ஃபோர்ட்' சாலையிலுள்ள தமது இல்லத்திலேயே நடத்தி நல்ல தாயாகவும், மகளாகவும் இசை இயக்குனராகவும் உறுவெடுத்தார்.பல பொறுப்புகளைச் சிறப்பாக கையாலும் திறமையும், கணவன் மற்றும் பிள்ளைகளின் ஆதரவும் அவரை வாழ்க்கையில் முன்னேற ஊன்றுகோலாக அமைந்தன.

img1

“பல இனத்தவரின் இசையை ஒருங்கினைத்து இசையமைத்த முன்னோடிகளில் நானும் ஒருவர்."

img1

குடும்ப பொறுப்பும் கடமைகளும் அதிகரிக்க அதிகரிக்க, இசைக்குழு இயக்குனர் பொறுப்புகளைச் சமாளிக்க சற்று தடுமாறினார் திருமதி லலிதா. என்றும் விரிந்த சிந்தனையுடன் செயல்படக் கூடிய இவர், கலப்பு இசையில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தோல்விகள் தழுவினாலும் விசிரிகளிடமிருந்தும் செய்தி நிருபர்களிடமிருந்தும் குறைகள் எழுந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வைத்த காலை பின்வாங்காமல் செயல்பட்டார். அவற்றிலுள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமது முயற்சிகளை தீவிரமாக பின்தொடர்ந்தார். மற்றவர்கள் கூறுவதை உள்வாங்கி குறுகிப்போகாமல் தமது விழுமியங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார். தமக்குக்கீழ் இசை கற்கும் இசைக்குழு உறுப்பினர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். அவர்களுக்குள் உள்ள திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை குன்றின் மேலிட்ட விளக்குபோல பிரகாசமாக திகழ வைத்தார். முனைவர் சிட்னி மற்றும் டிக் லீ போன்ற புகழ்பெற்ற பிரபலங்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சி படைத்த அனுபவமும் திருமதி லலிதாவுக்கு உண்டு. நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு பல பிரசித்தமான இசை மேடைகளில் தம் இசை விருந்தை படைத்து பலரின் பாராட்டுகளை பெற்ற பெருமை இவரைச் சேரும். இதற்கு மேல் ஒரு இசைக் கலைஞருக்கு என்ன தேவை?

“எதை நோக்கி பயணிக்கிறேன் என்று தெரியவில்லை என்றாலும் செல்லும் பாதையின் உச்சத்தை அடைய நான் விரும்பினேன்."

இசைக்குழுவை ஆரம்பித்தது முதல் இசைக்கருவிகளை கொண்டுவந்து இசைக்கலைஞர்களுக்கு பயிற்சியளித்தது வரை இவரது பங்களிப்புகள் எண்ணிலடங்கா. ஆனால் இவை அனைத்தும் இவரது விடாப்பிடியா முயற்சியாலும் புதிதாக செய்யவேண்டும் என்ற சிந்தனையாலும்தான் சாத்தியமானது. தமது இசை நிகழ்ச்சிக்கு தேவையான இசையமைப்பாளர்களைத் துணிச்சலுடன் சென்று தேர்ந்தெடுப்பார் திருமதி லலிதா. நிதி பற்றாக்குறை இவரின் திட்டத்தைத் தடம்புரளச் செய்ததேயில்லை. இவரது செயல்திறன் மூலம் கிடைத்த நிதி தொகையுடன் இசை நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்த இவரால் முடிந்தது. இன்னும் மற்ற பல இசைக்குழுக்களுடன் ஒன்றாகச் செயல்பட்டு இசை நிகழ்ச்சிகளைப் படைத்த அனுபவங்களும் இவருக்கு உண்டு. மேல்நாட்டு, சீன இசையில் தேர்ச்சிப்பெற்ற தேசியப் பல்லிய இசைக்குழுவுடன் ஓர் இசைநிகழ்ச்சியை படைத்துள்ளார். இதுபோன்ற பற்பல இசைக்குழுக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், சிங்கப்பூரிலேயே முதல் முறையாக அனைத்து இன மக்களின் இசையை ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமை இவரையும் சேரும். இசையின் பழைய வடிவங்களையும் பாணியையும் புதிதாக மாற்றியமைத்து பல புது இசைகளை அமைத்துள்ளார். இதுபோன்ற புதிய முயற்சிகளை எடுப்பதில் திருமதி லலிதா தயங்கியதேயில்லை. புதிய பல அம்சங்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட இவர் வரும் சவால்களை சந்திப்பதில் ஆர்வமாக காத்திருப்பார். இவர் தமது இசைக்குழுவை மலேசியா, இந்தியா, சுவீடன், மெக்ஸிக்கோ, தாய்லாந்து போன்ற 12 நாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

“ஒரு தொழில் வல்லுனர், பெண் இசைக்குழு இயக்குனர், இல்லத்தரசி மற்றும் ஒரு தாய் - ஒரு பெண் என்ற பார்வையில் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது மனம் மகிழ்கிறது."

அளவில்லா உணர்ச்சியும் ஆர்வமும் உள்ளிருந்து வரும்போது, வாழ்க்கையில் சாதனைகள் குவியும் என்பதில் ஐயமில்லை. இதற்கு திருமதி லலிதா எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். மனம் சொன்ன போக்கில் சென்ற இவர், தீவிர ஆர்வத்தினாலும் விருப்பத்தினாலும் இந்திய இசைக்குழுவை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த சாதனைகள் மேலும் தொடரும் வண்ணம் இசைக்குழுவின் 30-தாவது பிறந்தநாளை முன்னிட்டும் சிங்கப்பூரின் 50-தாவது பிறந்தநாளை முன்னிட்டும்  மிகச் சிறந்த இசை நிகழ்ச்சியை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த இசைநிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கும் 50 முகங்கள் குழு, திருமதி லலிதாவுக்கு அதனுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

img1

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.