ராதா கோவிந்தன் & மைக் கோவிந்தன்

திருமணம் முடித்து பல ஆண்டுகள் கழிந்தும் இல்லர வாழ்க்கையில் பிளவு ஏற்படாமல் தக்கவைக்க தம்பதியினருக்கு என்ன தேவை? காதல்தான், வேறு என்ன? என்று ஒரு சிலர் அடித்துக் கூறுவர். ஆனால் உண்மையில் பார்த்தால், கணவன் மனைவியின் உறவு அவர்களது பிள்ளைகளாலோ அல்லது அவர்கள் சேர்ந்து செய்யும் வேலையினாலோதான் வலுவடைகிறது. பலர் வாழ்க்கையின் பெரும் பங்கை தங்கள் பிள்ளைகளுக்காகவோ அல்லது அவர்களது வேலைக்காகவோ செலவழிக்கின்றனர். பிள்ளைகள் பெரியவர்களாகி வீட்டைவிட்டு வெளியேறும்போதோ வேலையிலிருந்து ஓய்வு பெரும்போதோ வாழ்கையில் பெரும் இழப்பு ஏற்பட்டதைப்போல அவர்கள் உணர்வார்கள். இத்தருணத்தில் அத்தம்பதியினர் இந்த இழப்பை சீர்செய்ய இயலாமல் தவிப்பர். ஆனால், கோவிந்-ராதா தம்பதியினருக்கோ அவர்கள் சேர்ந்து ஈடுபட்டிருந்த சமூக சேவை இந்த தவிப்பிலிருந்து அவர்களை மீட்டது.

எப்படி குடும்பத்தையும் பாராமரித்துக்கொண்டு அதே சமயத்தில் சமூகத்திருக்கும் அவர்களது பங்கை ஆற்றினர் என்பதை இத்தம்பதியினரிடமிருந்து அறிந்துக்கொள்ள 50 முகங்கள் குழுவுக்கு ஒரு அறிய வாய்ப்பு கிட்டியது.

தாங்கள் புரியும் தொண்டூழியத்திற்கு உறுதுணையாக இருவரும் இருந்தோம் என்று கூறும்போது ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள மரியாதையையும் காதலையும் எங்களால் காணமுடிந்தது. இந்த அருமையான கூட்டணி கல்யாணமானப் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கியது.

இளம் நங்கையாக 19 வயதில் ராதாவுக்கு இராணுவத்தில் அதிகாரியாக இருந்த கோவிந்தோடு திருமணம் முடிந்தது. இதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இராணுவ முகாமில் பிரிட்டிஷ் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரே ஓர் இந்திய தம்பதியாக புது வாழ்க்கைகை தொடங்கவேண்டிய சூழ்நிலை. கணவரின் துணையுடன் பல சவால்களை எதிர்கொள்ள ராதா கற்றுக்கொண்டார்.

"இதுதான் அவருக்கு சமூகத்தின் ஏழை எளியோர் மேல் அக்கறை வரக் காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன்."

இளம் நங்கையாக 19 வயதில் ராதாவுக்கு இராணுவத்தில் அதிகாரியாக இருந்த கோவிந்தோடு திருமணம் முடிந்தது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்ததது. இராணுவ முகாமில் பிரிட்டிஷ் குடும்பங்களுக்கு மத்தில் ஒரே இந்திய தம்பதியாக புது வாழ்க்கைகை தொடங்கவேண்டிய சூழ்நிலை. கணவரின் துணையுடன் பல சவால்களை எதிர்கொள்ள ராதா கற்றுக்கொண்டார்.

இராணுவ அதிகாரியின் மனைவியாக சமாளிக்க கற்றுக்கொண்ட பிறகு, சக சிங்கப்பூரர்களுக்கு உதவி கரம் நீட்ட ராதா முடிவெடுத்தார். தாதிமை துறையில் பயிற்சிப் பெற்றிருந்த அவருக்கு, 'லிட்டில் சிஸ்டர்ஸ் ஆஃப் த புவர்' என்ற முதியோர் பராமரிப்பு இல்லத்தில் உதவ கோரிக்கை வந்தபோது அதை உடனே ஏற்றுக்கொண்டார். உடற்பயிற்சி சிகிச்சையில் அனுபவம் பெற்ற ராதா, இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு ஏற்படும் உடல்வழியை நீ்க்க உதவினார். இந்த சேவையில் ஈடுபடுவதால் முதியோர்கள் உடல்ரீதியாக மட்டுமல்லாமல் அவர்களுடன் பேசி பழகும் காரணத்தால் மனரீதியாகவும் நன்மையடைகிறார்கள் என்பதை ராதா உணர ஆரம்பித்தார்.

பக்கவாதத்தால் சரியாக பேசவோ நடக்கவோ முடியாத முதியவர் ஒருவரைப் பற்றி ராதா அன்பாக நினைவுக்கூர்ந்தார். ராதா வருகைக்காக எப்பொழுதும் எதிர்பார்த்து காத்திருக்கும் அவர், அவருடன் கிடைக்கும் அந்த சில நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பேசி மகிழ்வார். அவர் பேசுவது சரியாகப் புரியாவிட்டாலும் அவர் கண்களில் தென்பட்ட மகிழ்ச்சி இன்றும் ராதாவின் நினைவில் பசுமரத்தாணிப்போல ஆழமாகப் பதிந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு, வேறு வழிகளில் தமது சமூகச் சேவையைத் தொடர ராதா ஆயத்தமானார்.

"இந்த அக்கா வீட்டை பராமரித்துக்கொள்ளாமல் இங்கு என்ன செய்கிறார் என்று 3 இந்திய சிறுவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது."

அக்காலகட்டத்தில் கோவிந்த், இராணுவத்திலிருந்து செம்பாவாங் கப்பல் நிலையத்தின் மனித வளத் துறைக்கு மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் துணை பணியாளர் அதிகாரியாக அடிமட்டத்தில் ஆரம்பித்தாலும் படிப்படியாக முன்னேறி இறுதியில் அந்த துறையின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தார்.

தமது நிறுவனத்தின் சமூக நடவடிக்கைகள் மூலம், 'கம்யூனிட்டி செஸ்ட்' போன்ற பல சமூக நிறுவனங்களுக்கு உதவ ஆரம்பித்தார். வேலை ஓய்வு பெற்றப் பிறகு, கோவிந்த் வேலையைப் பற்றி நினைத்து ஏங்கினாரோ இல்லையோ என தெரியாது. ஆனால், சமூக சேவையிலிருந்த அவரது ஆர்வத்தை விட்டுக்கொடுக்காமல் சமூக நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபடத் தொடங்கினார்.

"பணபலம் படைத்த பலர் அன்பு கிடைக்காமல் தவிக்கிறார்கள் என்று நான் கூறினேன்."

தமக்குப் பிறந்த குழந்தைகளை நல்வழிப்படுத்தி அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவது என்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். ஆனால், எவருக்கோ பிறந்து அவர்களால் கைவிடப்பட்ட நெறிதவறிய இளையர்களை அக்கறையுடன் பார்த்துக்கொள்வது என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

சமூக மற்றும் குடும்ப அமைச்சின் ஏற்பாட்டில் நெறிதவறிய இளையர்களை பராமரித்து எதிர்பார்க்காத சேவையில் ராதா 23 வருடங்களாக ஈடுபட்டார். வேலை சுலபமானதாக இல்லை. அந்த இளையர்களின் குடும்பத்தினருடன் பேசவேண்டும். பிரச்சனையின் ஒவ்வொரு அம்சத்தையுன் அலசி ஆராய்ந்து, அந்த இளையரை எப்படியாவது நல்வழிப்படுத்தி சமூகத்தின் நல்ல குடிமகனாக மாற்ற ராதா முயற்சிக்கவேண்டும். நீதிமன்றத்தில் பல பரிந்துரைகளை எடுத்து கூறும் போது,நீதிபதி கடினமாக பல கேள்விகளைக் கேட்பார். ' ஆனால் என்னிடமுள்ள திடநம்பிக்கையைப் பார்க்கும்போது, எனது பரிந்துரைகளை நீதிபதி ஏற்றுக்கொள்வார்,' என்கிறார் ராதா.

நெறிதவறிய இளையர்களின் நிலைமையை மேம்படுத்துவது என்பது முடியாத காரியமாக தென்பட்டாலும் சில சமயங்களில் அசாதாரண வழிகள் மூலமாக மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை ராதா அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டார்.

"அம்மா, எனக்கு தகப்பன் இருந்தால் எப்படி இருக்கும் என்று தெரியாது. தகப்பன் இருந்தால் எப்படி இருக்கும்? இது என்னை பெரிதும் பாதித்தது."

இத்தம்பதியினர், சுயநலமில்லாமல் சமூகத்தின் பின்தங்கியவர்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்துள்ளதை நேர்காணலின்போது பல தருணங்களில் பார்க்கமுடிந்தது.

ராதா அடித்தள அமைப்புகள் பலவற்றில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அட்மிரல்டி, வுட்லண்ட்ஸ் போன்ற வட்டாரங்களில் திட்டங்கள் பலவற்றின் நன்மைகளை பரப்பி வந்தார். சிண்டாவுடன் இணைந்து தகுதிப்பெற்ற பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்க தம்பதியினர் இருவரும் உதவனர். அடுத்த தலைமுறை தொண்டூழியர்களை தயார் படுத்திய முயற்சிகள் பற்றியும் இவர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.

பல நேரங்களில் குடும்ப தேவையை பின்தள்ளி சமூக தொண்டூழியத்திற்கு இவர்கள் நேரம் செலவிட்டதும் உண்டு. சில சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து தொண்டூழியம் புரியும்போது பெற்றோர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் நல்ல தாக்கத்தை இவர்களது பிள்ளைகளால் அறிந்துக்கொள்ள முடிந்தது. ' அவர்களது அம்மா ஏழை எளியோருக்கு தொண்டூழியம் செய்துவந்ததை கண்டு வளர்ந்தார்கள். இதன் மூலம் பெறுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற உயரிய பண்பை கற்றுக்கொண்டார்கள்.' என்று விளக்கினார் கோவிந்த்.

கோவிந்த்-ராதா தம்பதியினரை பார்த்துப் பேசியது 50 முகங்கள் குழுவுக்குக் கிடைத்த கௌரவமாகும். இவர்கள் மேன்மேலும் தங்களைப்போன்ற தம்பதியர்களை தொண்டூழியம் புரிய ஊக்கமளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

"சுதந்திரம் பெற்ற 50 வருடங்களில் நாம் எவ்வளவு கடந்து வந்துள்ளோம். ஆனால் எத்தனை முறை நம்மை சுற்றி நிலவும் நன்மைகளை நின்று நிதானமாகப் பார்த்துள்ளோம்."

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.