மா கோவிந்தராசு

அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்துக்குச் சென்றால், தமிழ் பழம் பாடல்களுக்கும் தமிழ் தகவல்களுக்கும் பல்வேறு இணைப்புகள் பலவாறு இருக்கும். அவர் தமிழ்மொழிமீது அளவற்ற பற்றுடையவர். இணையப்பக்கத்தில் மாகோ MGR என தம்மை குறிப்பிடுவார். அவர்தான் மா கோவிந்தராசு.

மா கோவிந்தராசு தம் ஏழாவது வயதில் குடும்பத்தாருடன் சிங்கப்பூருக்கு வந்தார். பிரபலமான தமிழ் பள்ளிக்கூடங்களில் (விவேகானந்தா பள்ளி, உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளி) தமிழ்கல்வியைத் தொடங்கி, பயின்றார். ஒரு நாடகப் படைப்பின்போது வகுப்பின் சகமாணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, தாம் நாடகநடிகராக முன்னுக்குத் தள்ளப்பட்டார். வளரும் காலங்களில் அவர் தமிழ்மொழிமீதும், கலைகள்மீதும் அவருக்கு இருந்த பற்று, உயர்நிலை பள்ளி சென்றபோதும் தொடர்ந்தது.

img1

“எனது அடிப்படைக்கல்வி தமிழ். அதனால் தமிழ்பற்று இருந்துச்சு. தமிழைத் தெரிந்துகிட்டேன். தமிழிலே படிச்சேன்...”

இன்றைய பிரதமர் திரு லீ சியன் லூங் படித்த வகுப்பில் தாமும் படித்ததாகப் பலர் சொல்ல இயலாது. ஆனால், தேசிய தொடக்கக்கல்லூரியில் அவரோடு படித்த அதிர்ஷ்டசாலிகள் சிலரில் இவரும் ஒருவர். ஒருவேளை இளம்வயதான மா கோவிந்தராசு சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவையாற்றும் திடமான உணர்வு, பிரதமரோடு கூடி இருந்ததினால் ஏற்பட்டதாக இருக்கலாம். 1960களில் பெக்யோ சமூக நிலைத்தில் சேர்ந்தார். இந்தியர்களை ஒன்றிணைக்கும் குறிக்கோளோடு இந்திய நற்பணி குழு தொடங்கியதில் இவரும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

“நமக்குள் புரிந்துணர்வு இருந்ததால்... நற்பணியின் அஸ்திவாரத்தை அன்று போட்டோம்."

பல்வேறு சமூகங்கள் கொடுத்த மகத்தான ஆதரவினால் 1988-ல் ‘நற்பணி பேரவை’ ஏற்பட வழிக்கோலியது. அது இந்திய சமூகத்தின் கல்வி, கலாச்சாரம், சமூக நலன், சமூக நடவடிக்கைகளை வளர்க்கும் ஒரு மேம்பட்ட குழுவாகும். இந்தியர்களின் பிரதிநிதியாகவும் அவர்களின் கருத்துகளை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் ஒரு தளமாகவும் இருந்தது. அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க “நற்பணி பேரவை” ஆரம்பக்கால பயணத்தின் தலைமைத்துவ சவாலை ஏற்றார். சிங்கப்பூர் 25-ஆம் ஆண்டு நிறைவை 1990-ல் அடைந்தபோது, அவருக்கு அது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அந்தக் கொண்டாட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, இந்தியசமூகத்தைப் பிரதிநிதித்துக் காட்டும்விதமாகச் செயல்படுத்த நற்பணி பேரவைக்குச் சொல்லப்பட்டது. அதன் வெற்றி 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

img1

“எல்லா இந்தியர்களும் சொன்னாங்க: ‘நான் இந்தியராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ ஏன்னா அவர்களுக்கு ஒரு தன்நம்பிக்கை வந்தது.”

மா கோவிந்தராசு இணையத்தின் வரவை ஆக்ககரமாய் தமிழுக்குப் பயனுள்ளதாக்கிக்கொண்டார். தவிர்க்கவியலா சூழ்நிலைகளால் அவரின் திட்டம் தடம் புரளாது இருந்திருக்குமேயானால், இவரோடு சிலரும் ‘WINDOWS’ மென்பொருளில் முதன்முதலில் தமிழை அறிமுகப்படுத்தியோராக இருந்திருப்பர். அவரால் இந்தியர்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட ‘Yahoo குழு’ மூலம், இந்திய சமூகத்தினரைக் கருத்துகளைத் தொடர்ந்து பரிமாறிக்கொள்ளும்படி ஈடுபடுத்தினார். இந்தக் கருத்தரங்கில் (Yahoo Group Forum) பல்வேறு அரசாங்க கொள்கைகள் கலந்துரையாடப்பட்டு அரசாங்கத்துக்குப் பயனுள்ள கருத்துகள் வழங்கப்பட்டன. மா கோவிந்தராசு 1980-களில் கணினிபற்றிய கண்காட்சிகளால் ஈர்க்கப்பட்டு தொழில்நுட்பங்களை ஆரம்பத்திலேயே பயன்படுத்திக்கொண்டார். சமீபதொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதுபுது சிந்தனைகளைக்கொண்டு தமிழ்மொழிக்கு உரமூட்ட தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறார். தமிழில் Animation தொழில்நுட்பத்தின்மூலம் தமிழில் (கணினியில்) உள்ளீடு செய்வதை அறிமுகப்படுத்த முயன்றிருக்கிறார். மின்னஞ்சல் தளத்தையும் செய்திக்கடிதம் வெளியிடுவதற்குக் கையாண்டு சாதித்திருக்கிறார். அந்தச் செய்திக்கடிதம் இந்தியசமூகம் ஒன்றுகூடவும் அதன் தேவைகளையும், அக்கறைகளையும் சொல்ல ஒரு வாய்ப்பையும் வழங்கியது.

“குழு அமைத்துவிட்டால் இரவு 1 மணிக்கும் கூட கருத்து கொடுக்கலாம்.”

Ma Govindarasu laments about the waning influence of Tamil in the community today. He feels the need for the next generation to step up to preserve our culture, language and traditions.

மா கோவிந்தராசு சமூகத்தில் இன்று தமிழ்பயன்பாடு பற்றியும் வருந்துகிறார். பண்பாட்டையும் மொழியையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க அடுத்த தலைமுறையினர் அதிக முயலுதல் வேண்டும் என விரும்புகிறார். சுய அங்கிகாரத்தையும், பாராட்டையும் நாடாத இவர், இன்று மருத்துவராகவும், ‘கெப்டனாகவும்’ விளங்கும் இரண்டு இந்திய இளையர்கள் தெரிவித்த ‘நன்றி பாராட்டுதலை’ நினைவுகூர்ந்து மனம் உருகுகிறார். அவர் தமிழ்மொழியை வளர்ப்பதிலும் இந்தியசமூகத்தை இணைப்பதிலும் தொடர்ந்து முயற்சி செய்வதாகக் கூறுகிறார். அப்படி, தான் செய்வதற்குக் காரணம் தமது மொழிபற்றும், ஆர்வமும் தவிர, சுயவிளம்பரமல்ல என்கிறார். தாம் 2015-ல் 65 வயதாகும்போதும்கூட, அதே அணையாத பேரார்வத்துடன் சமூகத்துக்குத் தொடர்ந்து சேவைஆற்ற உறுதி கூறுகிறார்.

img1

“நான் தனி வீரர் அல்ல. என் நண்பர்களின் ஆதரவால் தான் என்னால் சாதனை புரிய முடிந்தது. ”

சிங்கப்பூரின் 50-வது ஆண்டு கொண்டாட்டம் வரவிருக்கிற வேளையில் இந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கும் விதமாக மா கோவிந்தராசு தனித்து சிலவற்றை ஆரம்பித்திருக்கிறார். இந்திய முன்னோடிகளைப் பேட்டி எடுப்பதிலும், வெளியீடு செய்வதற்கு 50 மாணவர்களின் கட்டுரைகளைத் தொகுப்பதிலும், 50,000 இந்தியர்களை நாட்டுப் பிறந்தநாள் கொண்டாட்டம் பொருட்டு ‘video வாழ்த்துகள்’ சொல்வதை எடுப்பதிலும் இடைவிடாது செயல்படுகிறார். ‘செய்துமுடிக்கக்கூடிய காரியமல்ல’ என்று சிலர் சொல்லலாம். ஆனால் இது ‘கேப்டனை’ (அவரை இன்றும் அப்படியே சிலர் வழங்குகின்றனர்) தடுக்கப் போவதில்லை.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.