மாலினி மேனன்

பல வருடங்களாக உழைத்து பணி ஓய்வு பெற்ற பலர் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் குமாரி மாலினி மேனனுக்கோ அப்படியொரு சிந்தனையேயில்லை. அன்று அவர் சமூகநல அமைச்சில் ஆரம்பித்த பயணம் ஓய்வு காலத்தை அடைந்த பிறகும் தொடர்கிறது. சமூக நலனிற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அற்பணிக்க முடிவெடுத்துள்ளார் இவர். மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் துறைகளான மருத்துவம், பட்டப் படிப்பு, பொருளியல் போன்ற துறைகளை விட்டுவிட்டு சமூகக் கல்வியில் பட்டயப் படிப்பை கற்றுத் தேர்ந்தார். மற்றத் துறைகளுடன் ஒப்பிடுகையில் இத்துறையில் ஊதியம் குறைவுதான். ஆனால், சமூக தொண்டிற்கு முழு நேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை உணர்ந்ததாலும் இத்துறையில் என்னென்ன புது வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவும் இத்துறையை இவர் தேர்ந்தெடுத்தார். அன்று அவர் எடுத்த இம்முடிவினால் என்றும் தமக்கு வருத்தமில்லை என்று தெரிவித்தார் குமாரி மேனன். ஆரம்ப கட்டத்தில், பிள்ளைகளைப் பாதுகாக்கும் துறையில் தனது சமூகப் பணியைத் தொடங்கிய குமாரி மேனன், மாற்றுக் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டார். சட்ட ரீதியாக குடும்பங்களுக்கு தத்துக்கொடுப்பதற்கு முன்பு அவர்களைக் கவனிக்கும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது. போர் காலத்திற்குப் பிறகு, இதுபோன்ற பல சீனக் குழந்தைகள் புது இல்லம் கிடைக்கும் வரை இந்த பிரிவின் கீழ் சமூக நல துறையின் பொறுப்பில் பராமரிக்கப்பட்டனர்.

img1

“அவர்கள் சிறந்த செவிலித் தாய்களாக இருந்தார்கள். குழந்தைகள் மீது நிறைய பாசம் வைத்திருந்தனர்."

img1

சமூக பொதுநல ஊழியராக வேலைப்புரியும்போது, தத்துக்கொடு்க்கப்படும் குழந்தைகளுக்கும் அவர்களது புது குடும்பங்களுக்கும் நடுநிலையாக குமாரி மேனன் செயல்பட்டார். பராமரிப்பு இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு பொதுவாக சிறந்த குடும்ப சூழல் அமைவதில்லை. ஆதலால், பல தவறான நட்புகளைக்கொண்டு சமூகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட ஆரம்பிப்பார்கள். ஆதலால், தத்து கொடுக்கப்படும் குடும்பங்களுடன் பராமரிப்பு இல்லங்கள் நல்லுறவை வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தத்து குழந்தைகளுக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும். பல உதாரணங்களைக் குறித்துக்காட்டிய அவர், எவ்வளவுதான் சமூக ஆலோசகர்கள் பல மணி நேரம் செலவிட்டாலும், குழந்தைகள் சென்றடையும் குடும்பத்தின் உறுப்பினர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகலவில்லையென்றால் அக்குழந்தைகள் மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பிவிடுவார்கள் என்றும் வருத்தத்துடன் கூறினார்.

“போதை புழங்கிகள், குண்டர் கும்பல்கள் போன்ற தகாத குழுக்களுடன் இந்த சிறுவர்கள் சேர்வதுண்டு."

பல பிரச்சனைகளுக்கு தீர்வுகண்ட அனுபவம் குமாரி மேனனுக்கு உண்டு. தான் அளித்த ஆலோசனையால் பல இளையர்கள் மனமாற்றம் அடைந்து அமைதியாகத் தங்களது பிரச்சனைகளை தம்முடன் கலந்துரையாடியதாக இவர் பெருமைப்படுகிறார். வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாண்பது என்பது சற்று கடினம்தான். ஆனால், பத்து பிரச்சனைகளில் மூன்றுக்கு தீர்வு கண்டாலே வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் இவர். குமாரி மேனன் தாம் சந்தித்த பல இளையர்களுடன் இன்றும் தொடர்பு வைத்துள்ளார். அவர்களது வாழ்க்கை மற்றும் குடும்ப சூழ்நிலை முன்பைவிட முன்னேறியுள்ளதை எண்ணி ஊக்கமடைவதாக கூறுகிறார். 'குழந்தைகளுடன் பழகுவதைப்போன்ற ஒரு ஆக்கப்பூர்வமான அனுபவம் வேறு எதிலும் கிடைக்க இயலாது', என்கிறார் குமாரி மேனன்.

“பிள்ளைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும்."

img3

முழு நேர சமூக ஊழியர்களின் தேவையைத் தவிர்த்து, தொண்டூழியர்களின் தேவையைப் பற்றியும் விவரிக்கிறார் குமாரி மேனன். முழு நேர ஊழியர்களுடன் சேர்ந்து பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும், நடவடிக்கைகளை ஏற்பாடுசெய்யவும் தொண்டூழியர்கள் தேவைப்படுகிறார்கள். இதன் காரணத்தினாலே, தாம் வேலை ஓய்வு பெற்றப்பிறகும் சி்ண்டாவின் அழைப்பை கௌரவித்து அவர்களது குடும்ப நல பிரிவை ஆரம்பிக்க இவர் உதவினார். இவர் சிண்டாவில் தனது சமூகப் பணியைத் தொடர மற்றொரு காரணமும் உண்டு. முன்பு அவர் புரிந்த பணிகளில், பாதிக்கப்பட்டோருடன் நேரடியாக பழகும் வாய்ப்பு இவருக்குக் கிட்டவில்லை. அவரது மேற்பார்வையின் கீழ் வேலைபுரியும் சமூகநல அதிகாரிகளுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சிண்டாவிலோ தாமே களத்தில் இறங்கி பிரச்சனைகளைக் கையாளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவரின் பொறுப்பிலிருந்த பலருக்கு பொருளாதாரப் பற்றாக்குறைதான் பெரும் சவாலாக இருந்தது. இந்தப் பற்றாக்குறை மற்ற பல பிரச்சனைகளுக்கு வித்திட்டது. ஆதலால், இவற்றை தீர்க்க, குமாரி மேனன் உதவிச் சம்பளங்களை வழங்குதல், பிள்ளைகளை குழந்தை பராமரிப்பு நிலையங்களில் சேர்க்க உதவுதல் போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இதைத் தவிர்த்து, சிண்டா புதிதாக தொடங்கிய குடும்ப சேவை மையத்தின் பொதுநல உறுப்பினராகவும் செயல்பட்டார். ஆசிய பெண்கள் பொதுநல அமைப்பில் தொண்டூழியராகவும் பணிபுரிந்து தமது நீண்ட கால அனுபவத்தைக்கொண்டு அங்கு வேலை செய்வோரை மேற்பாற்வையிட்டார். இது போதாதென்று, பெடோக்கிலுள்ள 'டிரான்ஸ்' குடும்ப சேவை நிலையத்தில் பல தொண்டூழிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தனது நற்பணியை இவர் ஆற்றினார்.

“வாழ்க்கையை மீண்டும் வாழ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நான் என்றும் நேசிக்கும் சமூக பணியைத் தொடரவே விரும்பியிருப்பேன்"

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதின் முக்கியத்துவத்தை எடுத்துறைத்த குமாரி மேனன், சில சமையங்களில் அவற்றிற்கு தீர்வு காண இயலாமல் சோர்வடையும்போது இசையின் துணையைத் தேடிக்கொண்டதாகக் கூறினார். ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த சவாலைச் சந்திக்க இது உதவியாக இருந்ததாக விவரித்தார். இசைமேல் அதிக நாட்டமுள்ள இவர், 1996-இல் வீணை இசைக்கருவியை வாசிக்க ஆரம்பித்தார். தனது இரண்டாவது முழங்கால் முட்டுச் சிகிச்சையின் பிறகு நீண்ட நேரம் தரையில் அமர இயலாததால், வாசிப்பதை நிறுத்திக்கொண்டார். இருப்பினும், இசைமீதுள்ள நாட்டத்தை கைவிடாமல், குரலோசைப் பயிற்சியில் ஈடுபடுகிறார். சி்ண்டாவால் மட்டுமல்லாமல் 'டிரான்ஸ்' நிலையம், ஆசிய பொதுநல சங்கம் போன்ற அமைப்புகளும் இவரின் உதவியை நாடியுள்ளன. இதிலிருந்து குமாரி மேனன் பொதுத்தொண்டு துறையில் தன்னிகறற்று விளங்குவதை அறிந்து கொள்ளலாம். தனது வாழ்நாளில் இவ்வளவு சாதித்தும், இன்னும் சாதித்துக்கொண்டிருக்கும் குமாரி மேனன் தற்பெருமையற்று திகழ்கிறார். இவரது இந்த சுயநலமற்ற வாழ்க்கையை நமக்கு ஒரு சிறந்த ஊக்கமாக எடுத்துக்கொண்டு நாமும் சிறந்த குடிமக்களாக வாழ முற்படுவோம். 50 முகங்கள் குழுவில் இருக்கும் நாங்கள் அனைவரும் குமாரி மேனனின் தலையாய பொதுத்தொண்டுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.