A E மாணிக்கம்

"நான் எனது தாத்தாவின் பாதுகாப்பான கரங்களில் உள்ளேன் - மாணிக்கம் என்பதே அவரது பெயர்... நான் எனது தாத்தாவின் மீது அதிக அன்பு வைத்துள்ளேன். அதோடு மட்டுமல்லாமல், நான் எப்போதும் அவரைப் போலவே வெற்றிகரமான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறேன்" என்று திரு.மாணிக்கத்தின் 10 வயது பேத்தி ஹரிகா தான் எழுதிய பள்ளி கட்டுரை ஒன்றில் விவரிக்கிறார்.

திரு.மாணிக்கம் காட்டும் அன்பும் அரவணைப்பும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அப்பால்பட்ட ஒன்றாகும். அவர் தன் தாதியர் கடமைகளை அதிக ஆர்வத்துடன் மேற்கொள்வதோடு சமூக சேவை புரிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவது உண்மையிலேயே பாராட்டக்குறியதாகும்.

85-வயதாகும் திரு.மாணிக்கம் மலேசியாவின் தைபிங், ஈபோவில் பிறந்தார். அவர் சிங்கப்பூருக்கு வேலை தேடி பயணம் மேற்கொண்டபோது அவருக்கு வயது 20. அப்போது, அவர் ஆண் தாதியராகப் பணிப்புரிய ஆசைப்பட்டார். திரு.மாணிக்கத்தின் மனதில் தாதியர் துறையின்மேல் ஆர்வம் உண்டாவதற்குத் தைபிங்கில் ஏற்கனவே தாதியராக வேலை புரியும் அவரது அக்கா ஒரு முக்கிய காரணமாக இருந்தார். திரு.மாணிக்கம் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்ட தாதியராக முதலில் சேர்ந்து, 10 வருடங்களுக்குப் பின்பு தாதியர் அதிகாரியாகப் பதவி உயர்வு செய்யப்பட்டார். அவர் 34 ஆண்டுகளாக தாதியர் துறையில் சேவையாற்றி படிப்படியாக முன்னேறி அலெக்ஸேந்திரா மருத்துவமனையில் துணை நிர்வாகி பதவியை அடைந்தார்.

img1

“இந்த தாதியர் தொழில் கஷ்டமாக இருந்தாலும் எனக்கு மன நிறைவை தந்தது."

தாதியர் வேலையில் எதிர்வரும் கோரிக்கைகளைச் சமாளிப்பதோடு, திரு.மாணிக்கம் சிங்கப்பூர் கீழங்கவாதம் சங்கத்தில் (Singapore Association of Paraplegics) தொண்டூழியம் புரிவதற்கும் நேரத்தை வகுத்துக்கொண்டார். அவர் 1976-ஆம் ஆண்டு முதல் அச்சங்கத்தில் பொதுநலன் மற்றும் வீட்டுச் சேவை துணை குழுவின் தலைவராகப் பதவியேற்றார். அவர் இடுப்பிற்குக் கீழ் செயலிழந்த நிலையில் உள்ளவர்களைத் தங்கள் வீடுகளில் சென்று பார்ப்பதோடு அவர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ பராமரிப்பிலும் புனர்வாழ்விலும் உதவி வந்தார்.

“சமூகத்தின்மீது எனக்கிருந்த நாட்டமே என்னை இவ்வளவு செய்யத் தூண்டியது."

img2

நம்மில் பலர் தொண்டூழியம் புரிவதற்கு நேரம் போதவில்லை என்று காரணம் காட்டுவோம். திரு.மாணிக்கத்திற்கு நேரம் சரியாக இருந்தாலும் அவர் மருத்துவ இல்லங்களில் மேலும் தொண்டூழியம் புரிவதற்குத் தனது நேரத்தை ஒதுக்கிக்கொண்டார். அவர் 1995-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை தான் டாக் செங் மருத்துவமனையிலுள்ள ஆதரவு மருத்துவ இல்லத்தில் மற்றும் டோவர் ஆதரவு மருத்துவ நிலையத்தில் தொண்டூழியராக் உதவி வந்தார். தங்களது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் போராடும் நோயாளிகளுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தும்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவுக் கூறுகிறார் திரு.மாணிக்கம்.

திரு.மாணிக்கம் 26 ஆண்டுகளாக சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்பு சங்கத்திலும் (SANA) தொண்டூழியம் செய்து வந்தார். அவர் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை கூறி அவர்கள் போதைப்பொருட்களின் அடிமையிலிருந்து விடுபட உறுதுணையாக இருந்தார். சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்பு சங்கம் வழங்கும் பின்னலம் ஆலோசனை குழுவில் 1985 முதல் 2005-ஆம்

ஆண்டு வரை தலைவராக இருந்த திரு.கோபிகுமார், சங்கத்திற்குத் திரு.மாணிக்கம் அளித்த ஆதரவை நினைவுக் கூறிகிறார். "மாணிக்கம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களைச் சென்று காண முயற்சி மேற்கொள்வார். சில நேரங்களில் நெருக்கடிகளினால் அவரால் வர இயலாதப்போது, பலர் அவர் வராமையை எண்ணி வருந்துவர்." என்று திரு.கோபிகுமார் கூறுகிறார். சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்பு சங்கத்தில் மற்ற தொண்டூழியர்களிடையே திரு.மாணிக்கம் நன்கு மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்ந்தார். சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்பு சங்கம் இந்துக்களுக்கு வழங்கும் பின்னலம் ஆலோசனை குழுவில் அவரது உழைப்புக்கு அங்கீகாரமாக அவருக்கு மிக உயர்ந்த விருதான "பொன்னாடை" வழங்கப்பட்டது.

“நாம் அவர்களுக்கு எல்லையில்லா உற்சாகமும் ஊக்குவிப்பும் அளிப்போம். அது நமது கடமை."

திரு.மாணிக்கம் கடந்த 18 ஆண்டுகளாக இந்து அறக்கட்டளை வாரியத்திலும் தொண்டூழியப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் அவர் அங்கு தனது சேவைகளை அளித்து வருகிறார். கோயில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களின்போது திரு.மாணிக்கமும் மற்ற சில தாதியர்களும் குழு ஒன்றை அமைத்து ஏதாவது அவசர காலத்தில் தங்களது உதவியை அளித்து வருவர். இந்து அறக்கட்டளை வாரியம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினரிடம் திரு.மாணிக்கததை அங்குள்ள மிக வயதான தொண்டூழியராக அறிமுகப்படுத்திய சம்பவம் ஒன்றை அவர் இன்னும் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முதிய வயதில்கூட திரு.மாணிக்கம் ஓய்வு எடுத்துக்கொள்ளும் ஒருவர் அல்ல. அவர் சுறுசுறுப்புடன் தன்னால் இயன்றவரை உதவிக்கொண்டு வருகிறார், தொண்டூழியம் செய்து வருகிறார். சில வருடாங்களுக்கு முன்புக்கூட, பாசீர் ரீஸ் மக்கள் குடியிருப்பாளர் குழு அவரிடம் உதவியைக் கேட்டப்போது அவர் மனமகிழ்ச்சியுடன் தனது பங்கையாற்றினார்.

img3

சிங்கப்பூரின் 50-ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மேலும் பல இளைஞர்கள் தொண்டூழிய வேலையில் அதிக ஈடுபாட்டுடன் முன்வருவர் என்பதே திரு.மாணிக்கத்த்தின் விருப்பம். அதோடு, அவர் சிங்கப்பூரில் அனைவரும் சகிப்புத்தன்மை உடையவர்களாகவும் ஒற்றுமையுடன் வாழக்கூடியவர்களாகவும் "கோதோங் ரோயோங்" உணர்வோடு வாழும் ஒரு சமூகத்தை நோக்கி நாடாக முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

“அவன் மாற்றத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்ற நினைவுகள் என் மனத்தில் உள்ளது."

சிங்கபூரர்களிடையே முழு மனதுடன் தொண்டூழியம் புரியம் உணர்வை வெளிப்படுத்த விரும்பும் திரு.மாணிக்கத்தின் ஆசைகள் நிறைவேறவும் அவர் என்றைக்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் எங்களுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.