ப தியாகராசன்

சிங்கப்பூரில் உமறு புலவர் தமிழ் மொழி நிலையத்தைத் தவிர்த்து வேறு பல தமிழ் மொழி நிலையங்களும் இருந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு காலத்தில் கலைமகள் தமிழ்ப் பள்ளி, வாசுகி தமிழ்ப் பள்ளி, வள்ளுவர் தமிழ்ப் பள்ளி போன்று பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள், சிங்கப்பூரில் எங்கெங்கு தமிழர்கள் காணப்பட்டனரோ அங்கெல்லாம் இருந்தன. அக்காலத்தில் அரசாங்கப் பள்ளிகள் தமிழ் மொழியைக் கற்பிக்கவில்லை(வழங்கவில்லை). குழந்தைகள் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை உருவாக்க, தமிழ் சீர்திருத்தக் கழகம் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி வைக்க முன்வந்தது. தியாகராசனும் அவருடைய குழுவினரும் இத்திட்டத்தைத் துவக்கி வைப்பதில் சேர்த்துக்கொள்ளபப்பட்டனர்.

பள்ளிகளை ஆரம்பிப்பது ஒரு முக்கியப் பணியாக இருந்தபோதிலும் மாணவர்களை அப்பள்ளிகளில் சேர வைப்பதே பெரும் சவாலாக இருந்தது. அப்போதெல்லாம் வேலைத் தேடி வீ்ட்டிற்குப் போதுமான ஊழியத்தைக் கொண்டு சேர்ப்பதே இந்தியக் குடும்பங்களின் தலையாய குறிக்கோளாக இருந்தது. கல்வி அறிவைப் பெற வேண்டும் என்ற எண்ணம் அதனை அடுத்தே வந்தது. தியாகராசனும் அவருடைய குழுவினரும் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்ற இச்சவாலையும் வேறு பல சவால்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது.

“நாங்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகள் படித்தால் தான் பிற்காலத்தில் வளர்ச்சி அடைய முடியும் என்று எடுத்து கூறினோம்.”

பொதுச்சேவை என்பது மனத்தினுள் இருந்து வரவேண்டிய ஒன்று என்பது திரு தியாகராசனுடைய நம்பிக்கைகளுள் ஒன்றாகும். இவ்வுறுதியான நம்பிக்கையும் பொதுசேவையில் மற்றவருடைய தொண்டுகளைப் பார்த்த அனுபவமுமே இவரைப் பொதுசேவை செய்யத் தூண்டின. அவருடை முழு நேர வேலைக்குப் பின், நேரத்தை ஒதுக்கி முக்கிய நிகழ்ச்சிகளில் உதவி புரிவார். சில சமயங்களில் உதவிப் புரிவதற்கென்றே வேலையிலிருந்து விடுப்பும் எடுத்துக்கொள்வார். ஏனோ தானோ என்று உதவி புரியாமல், சங்கத்தால் நடத்தப்படும் திட்டங்களுக்கு தன் முழு உழைப்பையும் வழங்குவார். குறிப்பிடத்தக்க பணத்தொகையை ஈட்டித்தந்த தமிழ் பள்ளிகளுக்கான நிதித் திரட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி அவர் எங்களுடன் பெருமையாகப் பகிர்ந்து கெண்டார். தொடக்கம் முதல் முடிவு வரை அவர் இந்நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நீடிக்கக்கூடியதாக இருந்த போதெல்லாம் தியாகராசன் வெறும் காப்பியையும் ரொட்டியையும் உண்டு தன் பசியைப் போக்கிக்கொண்டார்.

தியாகராசன் இந்நிகழ்ச்சிகளில் தான் செலவழித்த நேரத்தை எண்ணி சிறிதும் வருத்தப்படுவதில்லை. தானும் தன் குழுவினரும் திட்டத்திற்காக உழைக்காதிருந்திருந்தால் சிங்கப்பூரும் அதனுடைய தமிழ்ச் சமூகமும் இன்றைய நிலைக்கு வந்திருக்காது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதன் மூலம் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கும் என்பதை அறிந்த போதிலும், அவர் இத்திட்டத்திற்காக முழுமனதோடு தன் உழைப்பை அர்ப்பணித்தார்.

“முன்பே கஷ்டப்பட்டது எல்லாம் இன்று நாம் சந்தோஷமாக இருக்க தான்.”

திரு தியாகராசன் புகழ்பெற்ற தமிழ்போடப்பட்ட எழுத்தாளரும் வெளியீட்டாளருமான திரு கொ.சாரங்கபாணியுடன் நெருங்கிப் பழகியதி்ல் பெருமை கொள்கிறார். அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார். சி்ங்கப்பூரில் தமிழருடைய முன்னேற்றத்திற்கு இரண்டு மூல காரணங்களாக இருந்தவை தமிழ் முரசும் திரு சாரங்கபாணியும் தான் என்று நம்புகிறார் திரு தியாகராசன். பொது சேவையில் தன் நாட்டத்தை செலுத்தியவர் திரு சாரங்கபாணி என்றும், ஹொக் லீ பேருந்து நிறுவனத்தில் தனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி புரிந்தது தமிழ் முரசு என்றும் கூறினார் அவர்.

திரு கோ சாரங்கபாணியுடன் பணிபுரிந்த அனுபவத்தை திரு தியாகராசன் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தின் மூலமே மக்களிடையே திரு கொ சாரங்கபாணியைப் பற்றிய விழிப்புணர்வு பெருகியது என்கிறார் தியாகராசன். புத்தக வெளியீட்டின் மூலம் தனக்கு கிடைத்த பாராட்டையும், பெருமையையும், அங்கீகாரத்தையும் நன்றியுடன் எண்ணிப் பூரிக்கிறார் அவர்.

“தமிழர்கள் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு சாரங்கபானியும் தமிழ் முரசும் ஒரு முக்கியக் காரணம்.”

அவருடைய பலதரப்பட்ட கடின உழைப்பிற்கு பின், தமிழ் இன்று சிங்கப்பூரின் அங்கீகார மொழிகளில் ஒன்றாக திகழ்வதைக் கண்டும் தமிழின் முன்னேற்றத்தைப் பார்த்தும், இவை நிறைவேற தனக்கும் ஒரு சிறிய பங்கிருந்ததை எண்ணிப் பெருமை கொள்கிறார் திரு தியாகராசன். இன்றுவரை அவர் சி்ங்கப்பூரில் தமிழ் மொழியின் பெரும் ஆதரவாளராக இருந்து வருகிறார். வெவ்வேறு மத நம்பிக்களைக் கொண்டிருந்தாலும், தமிழ் மொழியை நம் தாய் மொழியாகத் தழுவுவது நம்மை ஒன்று சேர்த்துள்ளது என்று நம்புகிறார் அவர்.

ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழாவைப் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன என்பதை எண்ணி பெருமை கொள்கிறார். மேலும் அவர் அன்றாடம் தமிழர்களுடன் தமிழில் பேசி அவர்களுக்குத் தமிழில் வணக்கம் கூறி தமிழ் மொழி புழக்கத்தை ஊக்குவிக்கிறார். திரு தியாகராசன் சிங்கப்பூரிலாவது தமிழ் சாகாமல் மேலும் வளரும் என்று நம்புகிறார். இந்தியாவில் பிறந்த போதிலும் அவர் சிங்கப்பூரில் வாழ்ந்து வளர்ந்ததால் சிங்கப்பூரிடமிருந்து நிறைய கற்றுள்ளார். சிங்கப்பூரின் எதிர்கால முயற்சிகளுக்குத் தன் ஆதரவை அளிப்பதில் உறுதி கொண்டுள்ளார்.

“தமிழ் மொழியால் பல இந்தியர்கள் ஒன்று கூடினோம்.”

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.