சிறுவயதில் இருந்தே பால் ராஜ் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். ஏழ்மையின் பிடியில் இருந்த போதும், படுக்கை இன்றித் தரையில் உறங்கிய போதும் தன்னிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுக்கும் தயாள சிந்தனை உடையவர். |
|
“எங்கள் வீட்டில் ஒரு காந்தி இருக்கிறார் என்று எனது அம்மா கூறுவார்.” |
தான் கடவுளிடம் கொண்ட ஆழமான நம்பிக்கையே தன்னுடைய தயாள குணத்திற்குக் காரணம் என்கிறார் பால் ராஜ். தன்னுடைய மனம் கூறியபடி செயல்படுவதாகவும், எந்தப் பெருமையையும் தான் விரும்பவில்லை என்றும் எங்களிடம் அழுத்தமாக அவர் கூறினார். தன்னுடைய கதை பிறரிடம் மனித நேயத்தை வளர்க்க ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையிலேயே தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார். மலேசியாவில் பிறந்து 1960 - ல் தன்னுடைய பதின்ம வயதில் சிங்கப்பூர் வந்தார் ராஜ். தன் தாயாருடனும் 8 சகோதரர்களுடனும் வாழ்ந்தவர். பல வேளைகளில் உணவின்றி பசியுடன் இருந்திருக்கிறார். கடினமான வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்தவர் முன்னுக்கு வரவேண்டும் என்று போராடினார். திருமணத்திற்குப் பிறகு இந்த எண்ணம் மேலும் தீவிரம் ஆனது. |
|
“நான் இரவு பகல் அயராமல் உழைப்பேன். வீடு திரும்பமாட்டேன்." |
|
“எனக்கு கடவுள் என்ன தருகிறாரோ அதை நான் எளியவரிடம் தருகிறேன்.” |
ராஜ் தன் செலவிற்குப்போக மிஞ்சிய பணத்தை வங்கியில் சேமிப்பதை விடுத்து பிறருக்குக் கொடுத்து உதவினார். தேவாலயத்தில் நற்பணி ஆற்றியதோடு வறியவர்க்கும் பல உதவிகளைச் செய்து வந்தார். நன்கொடை கொடுக்கும் மனம் கொண்ட ராஜ், தன் 70-வது பிறந்த நாளைத் தன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மட்டும் கொண்டாட விரும்பவில்லை. |
|
“இவ்வகையான வாழ்த்துக்களைப் பெறுவது ஒரு பெரும் பாக்கியம்.” |
உலகலாவிய பலரின் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளார் ராஜ். அவரால் பலனடைந்தவர்கள் கணக்கில் அடங்கா. உதாரணத்திற்கு மலேசியாவிலும் இந்தியாவிலும் உள்ள சில ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் பணம் அனுப்புகிறார் இந்த வள்ளல். பாத்தாமில் கிராமங்களுக்குத் தன் நண்பர்களுடன் சென்று மேம்பட்ட கழிவறை வசதிகளை உருவாக்கிக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்த உழைக்கிறார். அவ்வப்போது இந்தியாவின் சேரிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு நன்கொடை மூலம் திரட்டிய தூய உடைகள், போர்வைகள் போன்ற அடிப்படைப் பொருட்களைத் தந்து உதவுகிறார் ராஜ். இவற்றுக்கும் மேல், தன் பேரப் பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்று வறியவர்களின் நிலையையும் அவர்களுக்கு உதவும் முறையையும் கற்றுக்கொடுத்து இந்த நற்பண்புகள் இளைய தலைமுறையைச் சென்றடையச் செய்கிறார் ராஜ். தன்னுடைய மகனும் மகளும் தனக்கு உறுதுணையாக இருப்பதைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார் இந்த கலியுகக் கர்ணன். |
|
“என்னைப்பற்றி நினைப்பதைவிட மக்களுக்கு என்னை நான் அதிகமாக அற்பணித்துள்ளேன்.” |
இந்த வயதிலும் ஓய்வு எடுக்காமல், தேவாலயம் மூலமாகவும் தன்னிச்சையாகவும் செய்துவரும் மற்ற தொண்டூழியங்களுக்கிடையே இந்தியாவில் ஒரு அனாதை விடுதியைக் கட்டும் முயற்சியில் அயராது ஈடுபட்டுள்ளார் ராஜ். இவரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களும் தொண்டூழியத்தில் ஈடுபடத் தூண்டப்படுவார்கள் என நம்புகிறார் பால் ராஜ். இவரைச் சந்தித்ததில் பெருமை கொள்கிறது 50 முகங்கள். |
|
“உதவி செய்து உங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துக் -கொள்ளுங்கள்.” |