நன்றாக சாப்பிடு, நன்றாக தோற்றமளி, மகிழ்ச்சியாக இரு என்பதே திருமதி. டோரத்தி கிருஷ்ணனின் வாழ்க்கை மந்திரமாக இருந்தது. 50 முகங்கள் அவரைப் பேட்டி கண்ட பின்னர் எங்களுக்கு அவரைப் பற்றி தோன்றியதெல்லாம் இது தான்: அவர் ஒரு நோக்கத்துடன் செயல்படும் பெண்மணி, சத்துள்ள உணவை உண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டிய முக்கியத்துவத்தை நமது சமூகத்துடன் பகிர்ந்துக்கொள்ளும் ஒருவர். திருமதி. டோரத்தி ஒரு ஆசிரியர், ஒரு சமையல்காரர், ஒரு எழுத்தாளர் மற்றும் ஒரு தொலைக்காட்சி பிரபலம். இவை அனைத்தையும் அவர் ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரித்து தனது திறன்களை வெளிப்படுத்தியதால் தான் சாதிக்க முடிந்தது. சமைப்பதில் அவர் பேரார்வம் கொண்டதாலும் நாம் உண்ணும் உணவில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தாலும் திருமதி. டோரத்தி 14 வயதிலேயே சமைப்பதில் சிறந்த தேர்ச்சி பெற்றுவிட்டார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து படித்த திருமதி. டோரத்தி ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்தார், குறிப்பாக உணவு மற்றும் ஊட்டச்சத்து என்னும் பாடத்தை கற்பிக்க விரும்பினார். அவருக்கு சமைப்பது உயிர் என்றாலும், தனது மாணவர்களின் நலனை முதலில் வைத்து அவர்களது பள்ளிப் பயணம் சுமூகமாக செல்லும் ஒன்றாக இருக்க அவர் பற்பல முயற்சிகள் மேற்கொள்வார். அவர் தமிழ் மொழியை படிக்காவிட்டாலும் ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்தது உமர் புலவர் கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு தமிழில் கற்றுத் தந்தார். இது சவால் மிகுந்த ஒன்றாக இருந்தாலும், இவர் தனது மாணவர்கள் அனைவரும் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னை அர்ப்பணிப்பார். இன்று 70 வயதாகியும் கூட அவர் பள்ளிகளில் பாடம் கற்பித்து வருகிறார். |
|
"எனக்கு சமைப்பதில் திறன்கள் எதுவும் இல்லை. ஆனால் சிறு வயதிலிருந்தே உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் என்ன, அவற்றை எதற்க்காக உணவில் சேர்க்க வேண்டும் என்பதில் எனக்கு அதிக ஆர்வம்." |
திருமதி. டோரத்தி 1968-இல் முதன் முதலில் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகி தனது தொலைக்காட்சி பயணத்தைத் தொடர்ந்தார். நமது சமுகத்திற்கு ஆரோக்கியமான சமையலைப் பற்றி எடுத்துரைப்பதற்கு அந்த நிகழ்ச்சி நான்கு மொழிகளிலும் படைக்கப்பட்டது. திருமதி. டோரத்தி தமிழ் மொழி நிகழ்ச்சியில் அறிமுகமானார். அவருடைய இந்தப் பயணம் பின்னர் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் வானொலி நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்தது. வண்ணத் தொலைக்காட்சி தோன்றியதற்கு முன்பே நம்மில் பலர் திருமதி. டோரத்தியை சிங்கப்பூர் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். அவருடைய சமையல் குறிப்புகள், தையல் பற்றிய குறிப்புகள், வீட்டு வைத்தியங்கள் அனைத்தும் பலரை குறிப்பாக இல்லதரசிகளை ஈர்த்தது. |
|
"எனது தமிழில் நம்பிக்கை வைத்து எனது ஆசிரியர் என்னை ஊக்குவித்தார். மொழியை விட நாம் கூறும் கருத்துதான் முக்கியம் என அவர் சொல்வார்." |
திருமதி. டோரத்தி 2009-இல் தனது முதல் புத்தகமான 'E Z சமையல் புத்தகத்தை' வெளியிட்டார். அந்த புத்தகத்தை எழுத அவர் 5 வருடங்கள் எடுத்தார். அவர் கொண்ட அனுபவத்தை கருத்தில் கொண்டால் சிலர் 5 வருடங்கள் நீண்ட காலம் என்று எண்ணலாம். ஆனால், திருமதி. டோரத்தி எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற குணம் படைத்தவர். அவர் மற்றவர்கள் தனது புத்தகத்தை படிக்கும்போது எந்த பிரச்சினையுமின்றி சுலபமாக தனது சமையல் முறையை பின்பற்ற அவர் தேவையான அனைத்து உணவு பொருட்களையும் முறைகளையும் பட்டியலிட்டார். அதோடு, அவர் தனது சமையல் முறைகளை ஆராய்ச்சி செய்து மிகச் சிறந்த முறைகளைக் கண்டெடுக்க அயரா உழைத்தார். திருமதி. டோரத்தி தனது முதல் சமையல் குறிப்பு புத்தகத்தின் சாதனையையும் சந்தோஷத்தையும் சில அமைப்புகளுக்கு இலவசமாக கொடுத்து நிதி திரட்ட உதவினார். சிண்டா அமைப்பு அதன் Project Give நிதி திரட்டு நிகழ்ச்சிக்கு தனது புத்தகங்களை நன்கொடையாக தந்ததை முன்னிட்டு "அன்புக்காக ஒரு சமையல் குறிப்பு" என்று பாராட்டியது. திருமதி. டோரத்தி தனது தேவாலயத்திலும் நிதி திரட்ட தனது புத்தகங்களை நன்கொடையாக அளித்தார். அவர் தனது தேவாலயத்தில் ஏற்கனவே மாதத்திற்கு ஒரு முறை சமைத்து வசதி குறைந்தவர்களுக்கு உணவை இலவசமாக தருவார். |
|
"எனது புத்தகங்களிலிருந்து நான் இலாபம் அடைய நினைக்கவில்லை. எல்லாம் எனது சொந்தப் பணத்தால் நான் செய்தேன்." |
திருமதி. டோரத்தி ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சத்துள்ள உணவை உண்ண வேண்டும் என்று பகிர்ந்துக்கொண்டது பலரது வாழ்வில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்திருக்கும் என்று 50 முகங்கள் நம்புகிறது. நாங்கள் அவரை பெட்டி கண்டபோது அவர் பல குறிப்புகளைப் பகிர்ந்துக்கொண்டார். மதிய உணவை சமைக்கும்போது இரவு உணவையும் சமைத்தால் காய்கறிகளிலுள்ள சத்து குறைந்துவிடும் என்றார் அவர். அதோடு, இறைச்சி மற்றும் காய்கறி வகைகளை அதிகமான நேரம் சமைத்தால், உணவிலுள்ள சத்து குறையும். இறுதியில், இது அஜீரணம் வயிற்று கோளாறுகள் என பிரச்சினையில் தான் முடியும் என்றார் திருமதி. டோரத்தி. சமையல், தையல் என கற்று தரும் பழைய பாடத் திட்டம் மீண்டும் நடப்பிற்கு வர வேண்டும் என்பதே திருமதி.டோரத்தி விரும்புகிறார். இது போன்ற திறன்கள் மாணவர்களிடையே ஒரு வகையில் உரிமையுணர்வையும் என்னாலும் சொந்தமாக செய்ய முடியும் என்ற உணர்வையும் ஏற்படுத்தும். திருமதி. டோரத்தி மேன்மேலும் பல சத்துள்ள உணவிற்கான சமையல் குறிப்புகளை வெளியிட்டு பெருமை அடைவார் என்று 50 முகங்கள் அவரை வாழ்த்துகிறது. |
|
"பட்டதைப் பெற்று பட்டதாரியானால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது தவறான கருத்து. சிறு சிறு பாதைகளின் மூலம் கூட வாழ்க்கையில் முன்னேறலாம்." |