மற்றவர்களுக்கு உதவுவது நாம் அனைவரும் செய்யும் ஒன்றாகும். எங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உதவும் நல்ல பழக்கம் நம்மிடையே சிறு வயதிலிருந்தே ஆரம்பிக்கிறது. உதவுவதை எந்த காரணத்துக்கும் நிறுத்தக் கூடாது என்று நினைக்கும் திரு.அருள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவரது தலைமுறையினரை சேர்ந்தவர்களுக்கு உதவி வருகிறார். செயின்ட் லுக் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உதவி செய்வது அவரது உள்ளார்ந்த ஆசையாகும். ஸ்ரீ லங்காவில் வளர்ந்த திரு.அருள் தனது பெற்றோரால் இளம் வயதிலேயே கல்வி பெற ஆரம்பித்தார். பண்ணையில் வாழ்ந்து வளர்ந்தவராக இருந்தாலும் அருளின் அப்பா, திரு.சூசைபிள்ளை தமது குழைந்தைகள் அனைவரும் நல்ல கல்வியை பெற வேண்டும் என்று வலியுருத்துவாராம். பள்ளிக்கு சென்று பாடம் படிப்பதோடு, பல்வேறு பண்ணை வேலைகளிலும் உதவி வருவது சுலபமான காரியமல்ல. இருந்தாலும் திரு.அருளும் அவரது 5 சகோதரர்களும் விடா முயற்சியுடன் செயல்பட்டு இன்றைக்கு அனைவரும் நன்கு படித்து நல்ல வேலைகளில் பணிபுரிகின்றனர். தனது Diploma பட்டத்தை பெற்று 5 ஆண்டுகளுக்கு வேலை பார்த்த திரு.அருள் பின்னர் இங்கிலாந்துக்கு சென்று தனது மேற்படிப்பை மேற்கொண்டார். இங்கலாந்தில் தனக்கென சொல்வதற்கு பணம் அவரிடம் இல்லை. ஆயினும், திரு.அருள் விரைவில் தனது செலவினங்களுக்காகத் தனக்கு விருப்பப்பட்ட ஒரு வேலையில் சேர்ந்தார். அவர் அந்த வேலையை முழு மனதுடன் சந்தோஷமாக செய்தார். |
|
"பிள்ளைகள் விவசாயிகளாக இருந்து வாழ முடியாது என்று எண்ணியதால், பெற்றோர்கள் அவர்களை படிக்க வைத்தனர்." |
தனது படிப்பை முடித்த பிறகு, சிங்கப்பூரில் விரிவுரையாளர் வேலைக்கான செய்தித்தாள் விளம்பரம் ஒன்றுக்கு பதிலளித்த திரு.அருளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டானது. அவர் நேர்முக தேர்வுகளை கடந்து வந்து சிங்கப்பூர் பலதுறை தொழில்நுட்ப கழகத்தில் 1977-இல் விரிவுரையாளராக சேர்ந்து அதன் பின்னர் சிங்கப்பூர் பலதுறை தொழில்நுட்ப கழகத்தின் இந்திய கலாசார சமூகத்தில் ஆலோசகராக பணிபுரிந்தார். அடுத்த 17 வருடங்களாக, அந்த சமுகத்தில் இருந்த திரு.அருள் பல மாணவர்களுக்குக் கல்வி பிரச்சினைகளில் மட்டுமல்லாமல் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகளிலும் உதவி வந்தார். அவர் மாணவர்களின் இப்பிரச்சினைகளுக்குப் பல வகைகளில் தீர்வு காண முயற்சிப்பார். ஒரு முறை, மாணவர்களின் கவனத்தை ஈர்க்க உதவிச்சம்பளம் விண்ணப்பம் தாள்களை பலதுறை தொழில்நுட்ப கழகத்தின் தோசை கடையில் வைத்தார்! |
|
“அந்தக் காலத்தில் மாணவர்கள் சிறந்தவர்கள். இன்றைய மாணவர்கள் வணக்கம் கூட சொல்வதில்லை, என்னை வெறும் இயந்திரமாக நினைக்கிறார்கள்.” |
இந்திய கலாசார சமூகத்தில் திரு.அருள் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, அவர் செயின்ட் லுக் மருத்துவமனைக்கு அவரது மாணவர்களுடன் சென்று உதவியதும் அவரை பெரும் அளவில் பாதித்துள்ளது. இன்றும், அவர் தனது தொண்டூழிய வேலையை தொடர்ந்து தனியாக செய்து வருகிறார். நோயாளிகளுக்குத் துணையாக இருந்து அவர்கள் மருத்துவர்களை சென்று காண்பதிலிருந்து, மருத்துவ சோதனைகளுக்கு சென்று அவர்களுக்கு மருந்து வாங்க உதவி வருவது வரை அவரது தற்போதைய வேலையாகும். அவர் சுவாரஸ்யமான நோயாளிகளை காணும் அதே சமயம் கஷ்டமான நோயாளிகளையும் நாளுக்கு நாள் சந்திக்கிறாராம் திரு.அருள். கடந்த 10 வருடங்களாக செயின்ட் லுக் மருத்துவமனையில் தொண்டூழிய வேலையில் ஈடுபட்டு வருகின்ற திரு.அருள், அவராலும் சிறு வகையில் அங்குள்ளவர்களுக்கு உதவ முடியும் என்று எண்ணி மகிழ்ச்சியடைகிறார். |
|
"அவர்களுக்கு நன்கொடை கொடுத்து உதவுவதற்கு என்னிடம் பணம் இல்லை. இந்த வகையிலாவது நான் அவர்களுக்கு உதவி மகிழ்விப்பேன்.” |
செயின்ட் லுக்கை தவிர்த்து, திரு.அருள் நமது சமுகத்திற்கு பல்வேறு வகைகிளிலும் தொண்டு செய்து வருகிறார். அவர் கடந்த 37 ஆண்டுகளாக தாம் அதிகபட்ச வயதை அடையும் வரை வருடத்திற்கு இரண்டு முறை இரத்த தானம் கொடுத்து வந்துள்ளார். அதோடு, அவர் சிண்டாவின் குடும்ப சேவை திட்டத்திலும் கலந்துகொண்டு பல குடும்பங்களுக்கு நீண்ட காலமாகத் தம்மால் இயன்றவரை உதவி வருகிறார். இந்த திட்டதின் மூலம், இவர் சட்ட உதவியை நாடும் குடும்பங்கள் அல்லது படிப்பை மேலும் தொடர்ந்து படிக்க விரும்பும் தனிப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வந்தார். தனது தந்தை தனக்கு படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததற்கு திரு.அருள் நன்றியுடன் இருக்கிறார். தனது தந்தை பிறருக்கு எப்பொழுதும் உதவி கொடுக்கும் மனப்பான்மையையும் வலியுறுத்தினார். அவர், வேலையாட்கள் வீட்டில் அங்கங்கு செய்யும் எளிய கூலி வேலைகளுக்கு ஈடாக என்ன பொருட்கள் தேவையோ அதை எடுத்துக்கொள்ள சொல்வார் என்று திரு.அருள் நினைவுக் கூறுகிறார். திரு.அருளின் தந்தை எப்பொழுதும் "உனக்கு இரண்டு இருந்தால், ஒன்றை வேறொருவரிடம் கொடு" என்று கூறுவாராம். இதனாலேயே தனது மகள் தன தங்கையின் பென்சில் பெட்டியை எடுத்து தனது நண்பரிடம் ஒரு முறை கொடுத்துவிட்டாள்! சிங்கப்பூர் நமது 50 ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் தருணத்தில், திரு.அருள் சிங்கப்பூரர்களுக்கு ஒன்றை நினைவுப் படுத்த விரும்புகிறார். வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகள் என இரண்டிலும் வாழ்ந்த அனுபவத்தின் பெயரில், சிங்கப்பூரர்களாகிய நாம் குறை சொல்லிக்கொண்டே இருக்காமல் எங்களுக்கு என்ன இருக்கின்றதோ அதை நினைத்து சந்தோசம் அடைய வேண்டும் என்கிறார் திரு.அருள் அவர்கள். பாதுக்காப்பு நிறைந்த நாடாகவும் நம்பிக்கையான, எப்பொழுதும் மக்கள் நலனை கொண்டு செயல்படும் அரசாங்கமும் கொண்ட சிங்கப்பூரில் வாழ்வதற்கு நாம் அதிர்ஷ்டமானவர்கள் என்று திரு.அருள் அனைத்து சிங்கப்பூரர்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். |
|
"நீ நமது அரசாங்கத்தின்மேல் நம்பிக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.” |