சாரதா

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சுலபமான காரியமல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் எதாவது ஒரு தருணத்தில் தங்களது பிள்ளைகள் விரைவில் வளர்ந்து பெரியவர்களாகி அவரவருக்கு வாழ்க்கைகளைத் தேடி கொள்ள விரும்புவர். ஆனால், திருமதி.சாரதா இதற்கு மாறாக இன்னும் பற்பல பிள்ளைகளைத் தமது பராமரிப்புக்குக் கொண்டு வந்தார். திருமதி.சாரதா என்றைக்குமே பிள்ளை வளர்ப்பில் பெரிய பங்கை ஆற்றி வந்துள்ளார். அவர் தமது சொந்த பிள்ளைகளை மட்டுமல்லாமல் தனது சகோதரிகளின் பிள்ளைகளையும் பற்பல வசதி குறைந்த வளர்ப்பு பிள்ளைகளையும் கவனித்து வளர்த்துள்ளார்.

46 வருடங்களுக்கு முன்பு, திருமதி.சாரதாவிற்கு நான்கு சொந்த பிள்ளைகள் இருந்தும் தமது முதல் வளர்ப்பு பிள்ளையை எடுக்க முடிவெடுத்தார். ஆரம்பத்தில் திருமதி.சாரதா அப்பிள்ளையின் வருத்தமான உதவியற்ற நிலையை கண்டு அதை வளர்க்க சிறிது தயக்கம் கொண்டார். இருந்தாலும் அவர் அப்பிள்ளைக்குப் பாதுக்காபாலராக பொறுப்பெடுத்து அவரது கண்காணிப்பில் அந்தப் பிள்ளையும் நாளடைவில் வலிமை பெற்று நன்றாக வளர்ந்து வந்தது.

அந்தப் பிள்ளைக்கு 30 வயதாகியபோது, அவள் வேறு இல்லத்துக்கு சென்று அங்கு தனியாக வாழ கற்றுகொண்டாள். திருமதி.சாரதா அவளை அடிக்கடி சென்று பார்த்து நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அவரது வளர்ப்பு மகளுக்கு திருமதி.சாரதா தான் அவரை வளர்த்துவிட்டவர் என்று அடையாளம் காண முடியாது. திருமதி.சாரதா கடந்து வாத பாதையில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அவர் தொடர்ந்து பல வசதி குறைந்த சிறப்பு தேவைகலுள்ள குழந்தைகளுக்கு அன்பு காட்டி வளர்த்து வருகிறார்.

"நானும் எனது குடும்பத்தினரும் அவர்களை எங்களது சொந்த பிள்ளைகளாக கருதினோம் பாரமாக கருதவில்லை."

அவரது முதல் வளர்ப்பு பிள்ளைக்குப் பின் திருமதி.சாரதா மேலும் பல பிள்ளைகளை சமுக குடும்ப வளர்ச்சி அமைச்சு பிள்ளை வளர்ப்பு திட்டத்தின் (MSF Fostering Scheme) கீழ் முழு மனதுடன் வளர்த்து வந்தார். அவற்றுள் பெரும்பாலான பிள்ளைகள் சிறப்பு தேவைகலுள்ள பிள்ளைகளாக இருந்தனர். எப்பொழுதும் இரண்டு இரண்டு பிள்ளைகளை எடுத்து கொண்ட திருமதி.சாரதா அவர்களைத் தனது சொந்த பிள்ளைகளைப் போல் நடத்தி அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் இருக்கும்படி கவனித்துக்கொண்டார். அவருடைய பெரிய குடும்பமும் ஒரே வீட்டில் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்ததால் அவருக்கு பெரும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர்.

திருமதி.சாரதாவின் முதல் வளர்ப்பு மகள் ஆக அதிக காலத்திற்கு அவருடன் வாழ்ந்து வந்தாள். அதன் பின்னர் பல வருடங்களாக பல வளர்ப்பு பிள்ளைகளை திருமதி.சாரதா வளர்க்க உதவியுள்ளார். அதனால், பிரியும்பொழுது ஏற்படும் வலி அவருக்கு தான் தெரியும். தாம் வளர்த்த பிள்ளைகள் தன்னைவிட்டு பிரிந்து தங்களுடைய சொந்த பெற்றோருடன் அல்லது தங்களை தத்தெடுக்கும் பெற்றோருடன் சேரும் பொழுது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான வலியை நினைவு கூறுகிறார் திருமதி.சாரதா. இருந்தாலும், வளர்ப்பு பிள்ளைகளுடன் தாம் செலவிட்ட சந்தோஷமான நேரங்களையும், ஒவ்வொரு பிள்ளையும் தமக்களித்த சந்தோஷத்தையும் உண்மையான அன்பையும் எண்ணி மகிழ்வார் அவர்..."நீங்கள் அவர்களை அன்புடன் கவனித்துக்கொள்ளும் போது, அவர்களும் உங்களுக்கு சிறு சிறு வழிகளில் அன்பு காட்டுவர்."

"எங்களுக்கு பெரிய குடும்பம் இருந்தது - எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து அனைவரும் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள உதவுவோம்."

இன்றைக்கு 76 வயதாகும் திருமதி.சாரதா எண்ணற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார், இன்னுமும் செய்துகொண்டு வருகிறார். தற்பொழுது அவர் கடந்த 18 வருடங்களாக இளம் பையன் ஒன்றை பார்த்துக்கொண்டு வருகிறார். எந்த ஒரு பெற்றோரை போலவும் திருமதி.சாரதா தனது மகன் எங்கே செல்கிறான், அவனுடைய நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கவலைப்படுவார். இதுவே அவர் ஒரு சொந்த பெற்றோரை போன்றே தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார் என்பதற்கான அடையாளம். திருமதி.சாரதாவின் சொந்த மகள் 19 வயதிலேயே தவறியபோது அவருக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தது. அதையெல்லாம் தாண்டி வந்த இவர் தொடர்ந்து பிள்ளைகளிடம் அன்பாக பழகுகிறார், பிள்ளைகளும் அவரிடம் அன்பை காட்டி மகிழ்கின்றனர். "என்னுடைய (தற்போதைய வளர்ப்பு) மகன் எனக்கு உணவு கொண்டுவருவார், எனக்கு உடல் நலமில்லாமல் இருக்கும்போது என்னை மருத்துவர் காணவும் கொண்டு செல்வார்," என்று திருமதி.சாரதா தனது வளர்ப்பு மகன் காட்டும் அன்பை பெருமையுடன் நினைவு கூறுகிறார்.

தனது தந்தையிடம் தாம் செய்த வாக்குறுதியை நினைவில் வைத்துக்கொண்டு, திருமதி.சாரதா தாம் வளர்க்கும் அணைத்து பிள்ளைகளுக்கும் சரியான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். சரியான கல்வி மட்டுமல்லாமல், தனது கவனிப்பில் வளரும் அணைத்து பிள்ளைகளுக்கும் அவர் நல்ல பண்புகளைக் கற்று தருகிறார். பிறர், தாம் வளர்த்த பிள்ளைகள் ஒழுங்கு மரியாதை மிக்க பிள்ளைகள் என்று கூறும்போதெல்லாம் அவருக்கு ஒரு தனி பெருமை என்கிறார் திருமதி.சாரதா.

"எல்லாம் நாம் எப்படி பிள்ளையை வளர்கிறோம் என்று பொறுத்திருக்கிறது."

சமுக குடும்ப வளர்ச்சி அமைச்சு பிள்ளை வளர்ப்பு திட்டம் (MSF Fostering Scheme) பற்பல பிள்ளைகளுக்குத் தங்க வீடு மட்டுமின்றி குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் வளர்ப்பு குடும்பங்களின் மூலம் அளித்து உதவுகிறது. திருமதி.சாரதாவும் ஏராளமான பிள்ளைகளுக்கு நல்ல ஒரு குடும்ப சுழலை அமைத்துக்கொள்ள உதவியுள்ளார், முழு மூச்சுடன் நேரத்தை அர்ப்பணித்துள்ளார். இந்த பிள்ளை வளர்ப்பு திட்டம் அவசியமானது, அனைவரும் வளர்ப்பு கொடும்பமாக முன்வந்து உதவ வேண்டும் என்று திருமதி.சாரதா நம்புகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது சொந்த மகனும் தற்போது இத்திட்டத்தின் கீழ் தனது அன்பை வளர்ப்பு பிள்ளையிடம் பகிர்ந்துகொள்கிறார்.

50 முகங்கள் திருமதி.சாரதா வளர்ப்பு பிள்ளைகளிடம் காட்டும் அளவில்லா அன்பையும் தாம் வளர்த்த பிள்ளைகளின் வாழ்க்கையில் சுவையான மாற்றங்களைக் கொண்டு வந்ததையும் எண்ணி பெருமைப்படுகிறது. திருமதி.சாரதாவிற்கு எங்களது உள்ளங்கனிந்த பாராட்டுகள்!

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.