கௌசல்யா தேவி

திருமதி ராமாவுக்கு அகம் நிறைய​ புத்துயிர், முகம் நிறைய​ சிரிப்பு. 74 வயதான​ இவர், இன்னும் 20 வயது ஆடவர் போல் உற்சாகத்துடன் தோன்றுகிறார். இவருடைய​ இடைவிடா தொண்டூழிய​ நோக்கமே, இவரைக் கண்டு ரசிக்க வைக்கும் சிறப்பாகும். 1985-ல் இருந்து நெடுங்காலமாகப்​ புக்கிட் பாஞ்ஜாங் இந்தியர் நற்பணி செயற்குழுத் தலைவராகப்​ பொறுப்பு வகித்து வருகிறார் திருமதி ராமா. நம் சமூகத்தை ஒன்றிணைய​ச் செய்யும் நிகழ்ச்சிகளை நடத்தி தொடர்ந்து புதிய​ சவால்களை மேற்கொள்கிறார். அவர் நம் இந்திய​ கலாச்சாரத்தைப் பற்றியும் அதன் பண்பாட்டினைப் பற்றியும் எல்லாருக்கும் புகட்டும் வகையில் பற்பல​ நடவடிக்கைகளைச் சமூக​ நிலையத்தில் நடத்தி வருகிறார். நமது கலாச்சாரமும் பண்பாடும் மறவாமல் இருக்கச் செய்வதும் மற்றும் அவற்றை நமது சமுதாயத்துடன் இயல்பாக​ இணைந்து இருக்கச் செய்வதும் அவருடைய​ கடமையாகவே கருதுகிறார்.

திருமதி ராமா 15-பேர் கொண்ட​ மகளிர் செயற்குழுவைத் தலைமையெற்று வருகிறார். இதோடு, அனைத்து பெண்களுக்கும் முன் உதாரணமாகத்​ திகழ​ முற்படுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரணப் பெண்களாலும் உடல் கட்டுடன் திகழ​ முடியும் என்பதை நிரூபிக்க​, 120கிமி துரித​ நடை செய்து சாதனை படைத்துள்ளார். பெண்கள் அவர்களது அன்றாட பணிகளிடையே சிக்கிப் பிணைந்து இல்லாமல், சற்று நேரம் அவ்வேலைகளிலிருந்து விடைப்பெற்று, ஆரோக்கிய வாழ்வில் கவனம் செலுத்த​ வேண்டும் என்று சொல்கிறார் திருமதி ராமா.

பம்பரம் போல் சுற்றிக் கொண்டே இருக்கும் இவர், பொழுதுப்போக்கிற்கும் நேரம் ஒதுக்குகிறார். திருமதி ராமா, சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இதுவரை 4 முறை தன் முத்திரையைப் பதித்துள்ளார். அடுத்த ஆண்டு மறுபடியும் சாதனைப் படைக்க, சிங்கையின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மிகப் பெரிய செயற்கைப் பூவைச் செய்ய களம் இறங்கப் போகிறார்.

img1

“நீங்க நம்ப மாட்டீங்க - 20 வருஷமா என்னுடைய IAEC மேலான்மை குழுவிலை தான் எல்லாம் பெண்களா இருக்காங்க."

திருமதி ராமா 2001ல் பிரதமர் அலுவலகத்திலிருந்து மிகப்​ பெருமைக்குரிய​ பொது சேவைக்கான PBM விருதினைப் பெற்றார் அவர். 2009ல், மீண்டும், தனது தொண்டூழிய​ பணிகளை அங்கிகரித்து​ சமுதாயக்​ குடும்ப​ மேம்பாட்டு அமைச்சு ‘காம்கேர்’ (ComCare) விருதினை வழங்கியது.

கடந்த​ 30 வருடங்களாகப் பற்பல சமூக​ இல்லங்களுக்குத் தொடர்ந்து சென்று வருகிறார் திருமதி ராமா. அங்கே உள்ளவர்களுக்குத் தனது ருசியான​ சமையல், அவர்களிடையே தொலைந்து போயிருக்கும் மகிழ்ச்சியை மீட்டுக் கொடுக்க​ உதவுகிறது என்று நம்புகிறார். தன் குடும்பத்தை ஒன்று சேரச் செய்வதும், இவரை எதிர்பார்த்து சமூக​ இல்லங்களில் காத்திருப்பவர்களை மகிழ்ச்சி அடைய​ச் செய்வதும் திருமதி ராமாவின் ருசியான சமையல் தான்.

img2

“அந்த கறியை போல்லெ ஊத்திக் குடிப்பாங்க, அவ்வளோ அருமையா இருக்கும்."

தன்னால் முடிந்த​ அளவுக்குத் திருமதி ராமா தினந்தோறும் தன்னைச் சுற்றி இருக்கும் சிறுவர்களையும் முதியோர்களையும் கவனித்துக்கொள்கிறார். இவர்களுக்காக இவர் செய்யும் சேவைகள் பல​ விதம்.

வெகு காலமாக​ இவர் கோயில்களிலிலும் முக்கிய​ விசேஷ​ காலங்களிலிலும் உதவிப் புரிந்து வருகிறார். பக்தர்கள் நிம்மதியாகப்​ பிராத்தனை செய்து வர இவர் உதவுகிறார். இப்படி எதையும் எதிர் பாராமல் உதவி புரிபவரைக் காண்பது ஓர் அதிசயம் தான்.

"நான் மனசார பொது தொண்டு செய்கிறேன். விருதுக்கோ பாராட்டுக்கோ எல்லாம் நான் வரமாட்டேன்."

திருமதி ராமா தன் குடும்பத்தால் நிச்சயிக்கப்​ பட்ட திருமணத்திற்குப் பின்பு தான் சிங்கப்பூருக்கு வந்தார். 1966 முதல் சிங்கை தான் இவரது வீடு.

இவர் மலேசியாவில் ஒரு பெரிய குடும்பத்தில் வளர்ந்தவர். 2 வயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்டதால், அம்மா தான் இரவும் பகலும் உழைத்து இவரையும் இவரது சகோதரர்களையும் வளர்த்தார். பல கடினங்களையும் மீறி, இவரது அம்மா 18 பிள்ளைகளையும் படிக்க​ வைக்க​ முயற்சி செய்தார். திருமதி ராமாவுக்கு உடன் பிறந்த 12 சகோதரர்கள் இருந்தபோதிலும், அவருடைய​ அம்மா மேற்கொண்டு 5 பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்தார்.

அவரது அம்மாவின் உரத்த குரலினால் அவர்கள் குடியிருந்த இடத்தில் அவரை ‘ரேடியோ மாமி’ என அழைத்தனர். திருமதி ராமா குணத்திலும் பண்பிலும் தன் தாயாரை போல் உள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இவரின் அன்பும் பரிவும், சமுதாயத்தின் மீது இருக்கும் அக்கறையும் அவர் தாயாரின் வழியே வந்துள்ளது.

img3

"அதற்க்கு அப்பாற்ப்பட்டு அம்மா 5 பிள்ளைகளை எடுத்து வளர்த்தாங்க. மொத்தம் 18 பிள்ளைகள்."

திருமதி ராமா 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே தொண்டூழியம் செய்து வருகிறார். ஆனால், இக்கால​ இளைஞர்களுக்குச் சேவை புரியும் நேரம் வந்து விட்டது என்கிறார். இளைஞர்கள் தானாகவே முன் வந்து தம் சமூகத்துக்குத் தொண்டு செய்ய வேண்டும். இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவராக தற்போது பொறுப்பேற்றிருக்கும் இவர் தற்போது அக்குழுவின் அடுத்த தலைவரை நியமிக்கும் பணியில் சுறுசுறுப்பாக​ ஈடுபட்டுள்ளார். இருந்தாலும், இவருக்குத் தொண்டூழியப் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் எண்ணமே இல்லை. இன்னும் நம் தமிழர்களுக்குத் துரித​ நடைப் பயிற்சிகளில் ஆர்வம் வளர்ப்பதோடு அவற்றில் அவர்களைப் பங்கு பெற செய்ய வேண்டும் என்பது இவரது கனவாக உள்ளது. எப்படியாவது 500 இந்தியர்களைத் திரட்டி ஒரு துரித​ நடைப் பயிற்சியை செய்ய​ வேண்டும் என்ற​ குறிக்கோளைக் கொண்டுள்ளார்.

50முகங்கள் திருமதி ராமா நம் சமுதாயத்திற்கு அயராது செய்த​ சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.