நாற்பது ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு சாதனை. அதுவும் பயிற்சியே எடுத்துக்கொள்ளாத ஒரு போட்டியில்! ஆம், இதுவே எழுபத்தி இரண்டு வயதான திருமதி குளோரி பர்ணபாசின் சகாப்தமாகும். எதிர்பாராத வகையில், விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்து, பின்பு பல திடல்தட போட்டிகளில் பற்பல சாதனைகளை படைத்து, நம் தாய்நாடான சிங்கப்பூரிற்கு பெருமை சேர்த்தவரே திருமதி குளோரி ஆவார். தனது பெயரிற்கு ஏற்ப, திருமதி குளோரி சிங்கப்பூரிற்கு பெருமை சேர்த்துள்ளார், இன்னும் கூட சேர்த்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான், அவர் ஜப்பானில் நடைபெற்ற உலகளாவிய தங்க தலைவர்கள் (International Gold Masters) போட்டியில் கலந்துகொண்டு உயர தாவுதலில் தங்க பதக்கமும் நீல தாவுதலில் வெள்ளி பதக்கமும் வென்று நம் நாட்டையே சிறப்பித்துள்ளார். திடல்தட வீராங்கனையாக மட்டுமின்றி திருமதி குளோரி பர்ணபாஸ் ஓர் ஆசிரியராகவும் ஐம்பது வருடங்களுக்கு பணி புரிந்துள்ளார். தனக்கு தானே விடுமுறை கொடுக்க எண்ணிய திருமதி குளோரி, அனைத்து வேலையிலிருந்தும் ஓய்வுபெற்றார். ஆனால் சுறுசுறுப்பாகவே இருந்து பழகிய இவருக்கு இது மிகுந்த சலிப்பை உண்டாக்கியது. ஆகவே அவர் மீண்டும் திடலில் கால் பதித்தார் - ஆனால் இம்முறை உலகளாவிய தங்க தலைவர்கள் போட்டியில். |
தாம் எங்கு துவங்கினாரோ - உயர தாவுதல் - அங்கேயே மீண்டும் செல்வாதாக கூறுகிறார் திருமதி குளோரி பர்ணபாஸ். |
|
“நாம் எதிர்பாராத சமயத்தில் நம்மை அடையும் ஒன்றே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்!" |
குளோரியின் திறமையை கண்டறிந்த பயிற்றுவிப்பாளர்கள் உடனடியாக அவருக்கு தக்க பயிற்சியையும் உந்துதலையும் அளிக்க ஆரம்பித்து, அவரை உள்ளூர் போட்டிகளுக்கு மட்டுமில்லாமல் உலகளாவிய போட்டிகளுக்கும் மிக சிறந்த முறையில் தயார் செய்தனர். அவரிடமிருந்த திறனை மென்மேலும் மெருகேற்றி, அவர் இத்தனை நாட்களாக தவமாய் தவமிருந்த பயிற்சி மேடையையும் அளித்தனர் அவரது பயிற்றுவிப்பாளர்கள். இந்நாள் வரை, திருமதி குளோரி தனது பயிற்றுவிப்பாளர்களுக்கு நன்றி உணர்வுடனே உள்ளார். தனது இந்த வெற்றிக்கும் நற்பெயருக்கும் வித்தாக தனது பயிற்றுவிப்பாளர்கள் தான் அமைந்தனர் என்று கூறுகிறார். 1962-ல் நடந்தேறிய சம்பவம் ஒன்றினை நினைவு கூறுகிறார் திருமதி குளோரி. தான் இபோவில் உள்ள முகாம் ஒன்றில் இருந்தபோது, அங்கு நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவா ஏற்பட்டதாம். இதனை தன் பயிற்றுவிப்பாளர் திரு டானோடு பகிர்ந்துகொண்ட போது, அவர், "போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் நானே உன்னை முகாமிலிருந்து அங்கு அழைத்து செல்கிறேன்!" என்று கூறினாராம். பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் அன்பின் சின்னமாகவே திகழ்ந்தனர். அவர்களது மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற பெரிதும் பாடுபட்டனர். திருமதி பர்ணபாஸ் அனைவரின் ஆதரவையும் பெற, அவர் தமது குடும்பத்தின் ஆதரவை மட்டும் பெற சிறிது கஷ்டப்பட்டார்! |
|
“பக்கபலமாக நமக்கு சிலர் இருக்கும் வரை நம்மால் எதையும் சாதிக்க முடியும்." |
1973 ஆண்டில் நடைபெற்ற தென்கிழக்காசிய போட்டிகளில், பெற்ற முதல் தங்க பதக்கமே திருமதி குளோரி பர்ணபாசை பல மேடைகளுக்கு இழுத்து சென்று பல வெற்றி கனிகளை அவருக்கு தந்தது. வெற்றியாளராக வாகை சூட வேண்டும் என்ற ஆசை மிகுந்திருந்த இவருக்கு இது ஒரு நல்ல துவக்கமாகவே இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய போட்டிகளில் அவர் 4X100m போட்டியிலும் 200m ஓட்டபந்தயத்திலும் முதல் இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து, 1970-ல் பாங்காக்கில் நடந்தேறிய ஆசிய விளையாட்டுகளில் வெள்ளி பதக்கமும் 1974-ல் டெஹ்ரானில் நடந்தேறிய ஆசிய விளையாட்டுகளில் 4X400m ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் 4X100m-ல் வெண்கல பதக்கமும் வென்றார்! இப்போதும், உலகளாவிய தங்க தலைவர்கள் (International Gold Masters) போட்டியில் கலந்துகொண்டு பல சாதனைகளை புரிந்துக்கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் மெல்பௌர்னில் நடைபெற்ற போட்டியில் வென்ற தங்க பதக்கமாகும்! |
இவ்வாறு பல போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும் கூட, திருமதி குளோரி மனத்தில் நீங்க ஓர் இடத்தை பிடித்தது 1973 ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளே ஆகும். 4X400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜப்பான் நாட்டினரை வென்று சிங்கப்பூரிற்கு பெருமை தேடி தர வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அதற்காக அவர் கடினமாகவும் உழைத்தார். ஆனால், சில தடை கற்களின் காரணத்தினால் அவர்கள் இரண்டாம் இடத்தையே பிடித்தனர்! இது மிக பெரிய ஏமாற்றமாக அமைந்தாலும் கூட, இதுவே பல சாதனைகளுக்கு ஒரு துவக்கமாக அமைந்தது. |
|
"வெற்றியை பணிவன்புடனும் தோல்வியை பரிவுடனும் எடுத்துக்கொள்ள வேண்டும்." |
விளையாட்டில் மட்டுமின்றி, திருமதி குளோரி பர்ணபாஸிற்கு கற்பித்தளிலும் அதிக நாட்டம் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. சிறு வயதிலேயே தன் தந்தையிடம் தனது கனவை பகிர்ந்துகொண்ட இவர், இப்போது ஒரு மிக சிறந்த ஆசிரியராக விளங்குகிறார். பிறரோடு கலந்துரையாட விரும்பிய இவர், தொடக்கபள்ளி, ஒன்றில் தனது ஆசிரியர் பணியை துவங்கினார். பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவகம் அளித்த உதவி சம்பளம் கொண்டு உடற்பயிற்சி ஆசிரியரானார். கற்பிக்கும் நேரத்திலும், பல போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டிய நிலைமை திருமதி பர்ணபாசிற்கு. தமது பள்ளி தலைமையாசிரியர்களின் உதவி இன்றி தாம் வெற்றி அடைந்திருக்க முடியாது என்று கூறுகிறார் இவர். காலையில் பள்ளியென்றும் மதியம் விளையாட்டு பயிற்சியென்றும் வகுக்க மேல் அதிகாரிகளே உதவினர் என்று நன்றியுடன் கூறுகிறார் திருமதி குளோரி பர்ணபாஸ். வேலையிலிருந்து ஓய்வுபெற்ற இக்காலத்திலும் திருமதி குளோரி ஆசிரியாராக பனி புரிவதற்கான வாய்ப்புகளை நாடிச் செல்கிறார். |
|
"அவரைக் கண்டு நானும் ஆசிரியர் ஆனேன்." |
பரிசு தொகை, பயிற்சி செய்வதற்கான இடங்கள், ஓடுவதற்கு தகுந்த உடைகள் இல்லாத அக்காலத்திலும், திருமதி பர்ணபாசை போன்று பல விளையாட்டு வீரர்கள் பூத்துள்ளனர். நம் நாட்டிற்கு எல்லையில்லா பெருமையை சேர்த்தும் உள்ளனர். விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆசையே இவர்களை இந்த அளவிற்கு ஊக்குவித்துள்ளது. தன்னிடம் உள்ள இந்த நாட்டத்தை இன்னும் கூட Singapore Masters Athletics மன்றத்தின் தலைவராக இருந்து நிறைவேற்றுகிறார் திருமதி குளோரி. ஒரு முன்மாதிரியாக இருந்து, பிற மூத்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறார். இந்த நேர்காணலின் இறுதியில், திருமதி குளோரி எவ்வாறு விளையாட்டு ஒரு மனிதனை அக அளவில் மட்டுமின்றி புற அளவிலும் செம்மைபடுத்துகிறது என்று குறிப்பிட்டார். விளையாட்டின் மூலம் நல்ல உறவுகளை உருவாக்கலாம்! நம் நாட்டு திருமதி குளோரி பர்ணபாஸ் போன்றோரை என்றும் மறவாது! |