கதிஜுன் நிஸா சிராஜ்

இரு மனங்கள் இணைவதையே திருமணம் என்று கூறுவோம். ஆண் பெண் என்ற பாகுபாடின்றி, ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருப்பதே திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும். பலர் திருமணத்தின் இன்றியமையாத தேவையை உணராமலேயே இருக்கின்றனர். எண்ணிலடங்கா பெண்கள் ஆண் ஆதிக்கத்தின் காரணத்தினால் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இவ்வாறு உள்ள பல பெண்களுக்கு நம்பிக்கை ஒளியாக இருந்துள்ளார் திருமதி சிராஜ் அவர்கள்.

img1

“குழந்தைக்குப் பால் இல்லாததால் தேநீர் கொடுக்கும் நிலை ஏற்பட்டது."

தனது எண்பத்து ஒன்பதாம் (89) வயதிலும், சிங்கப்பூர் இந்தியரான, திருமதி சிராஜ் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். சிறு வயதில் அனைத்து ஆசிகளையும் பெற்றிருந்த இவர், தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே குறிப்பிடுகிறார். தனது ஆனந்தத்தை பிறரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த பண்பு திருமதி சிராஜிடம் இருந்ததால் அவர் சமூக சேவையின் மீது நாட்டம் கொண்டார். தனது கணவரின் ஆதரவுடன், அவர் துன்பத்தில் தத்தளிக்கும் இஸ்லாமியர்களுக்கு தூணாக விளங்க தொடங்கினார். பிரச்சினை என்று அவரை நாடி வரும் எவரையும் அவர் நிராகரித்ததில்லை.

“சிங்கபூரிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை."

வலிமை குறைந்த பாலினமாக கருதப்படும் பெண்கள், ஆண்களின் வன்முறை செயல்களுக்கு ஆளாகும் போது, பெரும் அளவில் சிக்கித் தவிக்கின்றனர். இஸ்லாமிய நீதிமுறைகளின் படி இவ்வாறு தவிக்கவிடும் ஆண்களுக்குத் தண்டனை வாங்கி தருவது மிகவும் கடினமான ஒரு செயலாகவே இருந்தது. ஆகவே, திருமதி சிராஜ் பெரும் பாடுபட்டு உள்ளூரில் மட்டுமல்லாமல் உலகலாவிலும் திருமணம், விவாகரத்து சமூக நலன், போன்ற விவகாரங்களின் மீது ஒரு முற்போக்குச் சிந்தனையை உருவாக்கினார். மேலும் துன்புரும் பெண்களின் அவல நிலை கண்டு கொதித்தெழாமல், திருமது சிராஐ் வழக்கமான உரையாடல்களிலும் விவாதங்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முற்பட்டார். 'சியாரியா' நீதிமன்றத்தின் முதல் பெண் வழக்கு அதிகாரியாக இருந்ததோடல்லாமல், - தனது சமூகத்துப் பெண்களுக்காக,1964-இல் தற்போது 'பிபிஐஸ்' எனப்படும் சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் நலச் சங்கத்தையும் தொடங்கினார். அச்சங்கம் முஸ்லிம் பெண்களுக்கு தொண்டு, நலன்புரி, சட்ட மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இன்றுவரை இச்சங்கம் முஸ்லிம் பெண்களுக்கு உதவி புரியும் சங்கமாகவும் அவர்களின் மேம்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட சங்கமாகவும் இருந்துவருகிறது.

"எனது இனத்துப் பெண்களுக்கு நான் செய்யவில்லை என்றால், வேறு யார் செய்வார்? அவர்களது நலனைப் பேணிக் காப்பதே எனது தலையாய கடமையாகும்" என்று பெருமையோடு மொழிந்துள்ளார் திருமதி சிராஜ்.

img2
img3

சமூகச் சிந்தனை மிகுந்து இருந்த இவரைப் பலரும் போற்றினர். விருதுகள் சிலவற்றையும் பெற்றார் இவர். அவ்வுயரிய விருதுகளில் ஒன்று 'சிங்கப்பூர் பெண்களின் புகழ் கூடம்'

ஆனால், மற்றும் சிலரோ திருமதி சிராஜின் பணிகளுக்குத் தடைக் கற்களாக விளங்கினர். அவரை எதிர்த்து போராடினர். ஆனால் அவரும் அவரது நண்பர்களும், சிறிதும் அஞ்சாமல், தொடர்ந்து முயற்சி செய்து, வெற்றியும் பெற்றனர். தனது இனத்து பெண்களுக்கு ஒரு துணையாகத் தான் இருக்க வேண்டும் என்ற ஆசையே அவரை ஊக்குவித்தது. தான் பணிபுரிந்து கொண்டிருந்த சமையத்தில், விவாகரத்து எண்ணிக்கை குறைந்ததே அவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்ததாம். பிறரது பிரச்சனையை நான் ஏன் தீர்க்க வேண்டும் என்ற சுயநல போக்கினைக் கொண்டு திகழும் பலருக்கு மத்தியில், திருமதி சிராஜோ துன்பத்தில் துவழும் இஸ்லாமிய பெண்களுக்காகப் பலவற்றைச் செய்து வருபவர்.

“நாங்கள் உதவாவிட்டால் யார் இந்தப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவுவது?"

திருமதி சிராஜ் நம்மில் ஒருவராக இருந்தாலும் கூட, அவரது நடவடிக்கை அனைத்தும் சமூதாய சிந்தனையை அடிப்படையாகக்கொண்டது. பெண்கள் அனைவரும் உயர்க் கல்வி பெற்று ஆண்களுக்குச் சமமாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் இவர். தனது தாய் நாடான சிங்கப்பூரின் மீது அதிக பற்று கொண்டிருக்கும் இவர், சிங்கப்பூரின் வளர்ச்சியானது நிலையான குடும்பங்களிலேயே அடங்கியுள்ளது என்று கூறுகிறார். சிங்கப்பூர் மென்மேலும் வளர அவர் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

img4

“ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் படித்திருக்க வேண்டும்."

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.