அ வை கிருஷ்ணசாமி

எந்த தடையையும் பொருட்படுத்தாமல் பொதுநலத்தொண்டில் முழு மூச்சாக இறங்குவது என்பது சாதாரணமானக் காரியமில்லை. சமூக மேம்பாட்டுக்காகச் சுயநலமின்றிப் பாடுபடுவது சிலருக்கு ஒரு வாழ்க்கை குறிக்கோளாக இருக்கலாம். சிலருக்கு இன்பம் தரும் அம்சமாக அமையலாம். ஆனால் திரு கிருஷ்ணனோ பொதுநலத்தொண்டு என்பது சிறு வயதிலிருந்தே தமக்கு தொற்றிக்கொண்ட ஒன்று என்று கூறுகிறார்.

இந்தியாவிலிருந்து குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்த கிருஷ்ணசாமி, பெராக்கிலுள்ள தஞ்சுங் துவலாங்கில் பிறந்து வளர்ந்தார். பள்ளிப் பருவத்தைப் பெராக்கில் தைப்பெங்கிலுள்ள 'மக்ஸ்வெல் கில்ஸ்' என்ற பகுதியில் களித்த அவர், இறுதியில் இப்போவில் குடியேறினார். இந்தியாவின் பெரும் சுதந்திர போராட்ட தலைவரான சுபாஷ் சந்திர போஸ் திரு கிருஷ்ணனுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். சுபாஷைப் போல தாமும் இந்தியச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவேண்டும் என்று முடிவெடுத்து பல சமூகத் தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.

மலேயாவில் வாழ்ந்த இந்தியர்களைக் குடியுரிமை வாங்க கூக்குவித்ததோடு மலேயாவின் இந்திய அரசியல் அமைப்புகளின் தலைமைத்துவப் பொறுப்புகளில் பல மாற்றங்களைக் கொண்டுவரத் திரு கிருஷ்ணன் காரணமாக இருந்தார். சிறு வயதிலேயே இந்தியச் சமூகத்தை மேம்படுத்தவேண்டும் என்ற தீவிர ஆசை அசைக்க முடியாத ஒன்றாக அவரிடம் இருந்தது.

"இளம் வயதிலேயே சுபாஷின் ஆண்டு நினைவுநாளை கொண்டாட விரும்பினேன்!"

சமூக நலப்பணியைத் திரு கிருஷ்ணசாமி தொடர அவரது மனைவி திருமதி இந்திரா தேவி அதிக ஊக்குவிப்பும் ஆதரவும் தந்தார். அவர்தான் திரு கிருஷ்ணாவை தமிழ் சீர்திருத்த அமைப்பிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இந்திராவும் திருமதி தேவி மணியமும் நடத்திவந்த அந்த அமைப்பின் பெண் பிரிவில் உறுப்பினராகச் செயலாற்றிவந்தார். இந்தப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆட்டம் நாடகம் போன்ற பல கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை அந்தக் காலகட்டத்தில் நடத்தி வந்தனர்.

இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதின் மூலம், திரு கிருஷ்ணசாமி அமைப்பின் செயல்முறைகளை நன்கு தெரிந்துகொண்டார். ஃபேரர் பார்க்கில் இயங்கிய இந்திய மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டு பல அரசியல் அனுபவங்களைப் பெற்றார். அவரது இந்த ஈடுபாட்டின் மூலம், அவர் உறுப்பினராக செயல்பட்டுவந்த சீர்திருத்த அமைப்பு தேசிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்க ஆரம்பித்தது. பொங்கல் கொண்டாட்டம், தமிழர் திருநாள் மற்றும் தீபாவளி போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனது முத்திரையை அந்த அமைப்பு பதித்தது.

எடுத்த முடிவிற்கு தீர்வு காணாமல் திரு கிருஷ்ணன் இருந்ததில்லை. தமது முயற்சிகளில் உள்ள பயனை நன்கு அறிந்துகொண்டு வரும் சவால்களைத் தகர்த்தெரிந்து அவற்றை நிறைவேற்ற விடாமுயற்சியுடன் செயல்படுவார்.

"அமைப்பின் பொருளாதாரம் உயர, கூட்டுறவு தேவை."

திரு கிருஷ்ணசாமியின் தலைமையில், தமிழ்ப் பேரவை பல இணைப்பாட வகுப்புகளைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தியது. இந்த வகுப்புகளின் வெற்றியைப் பற்றி இன்றும் நினைவுகூறுகிறார் திரு கிருஷ்ணசாமி. இந்த முயற்சியை தம் வாழ்க்கையின் மனநிறைவு அளிக்கும் ஒன்றாக இவர் முதன்மை படுத்துகறார். இவர் விதைத்த இந்த விதையைத்தான் சிண்டா எடுத்து அதைப் பெரிதுபடுத்தி நடத்தி வருகிறது. இந்த இணைப்பாட வகுப்புகளால், நமது இந்திய சமூகத்தினர் எவ்வளவு நன்மை அடைந்து வருகின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல அனைவரும் அறிந்த உண்மை. தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் மொழி வாரத்தை 1995-இல் ஆரம்பிக்க இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

வேலையிடத்திலும் திரு கிருஷ்ணசாமி ஊழியர்களுக்கு சங்கம் அமைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவார். சிங்கப்பூர் குடிமகனாக இல்லாதபோதும்(1973-இல்தான் இவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது)அவரது தன்னிகறற்றப் பொது சேவையைக் கவனத்தில் கொண்டு பல பொறுப்புகளை எடுத்துக்கொள்ள சிங்கை அரசாங்கம் அவருக்கு அனுமதி வழங்கியது.

தமிழ் சீர்த்திருத்த அமைப்பின் சிறந்த வரலாற்றை நன்கு அறிந்த திரு கிருஷ்ணசாமி, அதனுடையச் செயல்பாட்டின் வேகம் குறையாமல் இருக்கப் பாடுபட்டார். நீதிமன்றத்திற்குச் சென்று அரசாங்கம் சொந்தமாக்கிக்கொண்ட அமைப்பின் கட்டடத்திற்குத் தகுந்த சன்மானத்தை பெற உதவினார். சிங்கையின் எதிர்காள சூழலுக்கு தகுந்தாற்போல் சிங்கை தமிழ்ச் சங்கம் என்று அச்சங்கத்திற்கு புது பெயர் சூட்டி தமது நீண்ட நாள் ஆசைய நிறைவேற்றிக்கொண்டார்.

பல சவால்களை எதிர்நோக்கினாலும், பல புதுமையான வழிகளை கையாண்டு புது உறுப்பினர்களைக் கவர திரு கிருஷ்ணன் முயல்கிறார்.

img1

"500 உறுப்பினர்களின் மாத கட்டணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மாதம் 20000 வெள்ளி அளவிலான வாடகையைச் சரிசெய்வது இயலாத காரியம்."

திரு கிருஷ்ணசாமி சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் அடையாளத்தை சர்வதேச அளவில் எடுத்துச்சென்றதை அங்கீகரித்து கௌரவிக்கும் வண்ணம் பல விருதுகளும் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டது.

சிங்கை தமிழன் சங்கத்தின் நடவடிக்கைகள் மூலம் புது குடியேறிகளை சிங்கப்பூர் சமூகத்திற்குள் இணைக்க உதவிய காரணத்தினால் 2013-இல், குவா யுவா என்ற சீன அமைப்பு ஒன்று இவருக்கு 'குடியேறிகளின் நண்பன்' என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று என்பதை நன்கு அறிந்த சிங்கை தமிழ்ச் சங்க அமைப்பு, திரு கிருஷ்ணசாமியின் தலைமையில் தொடர்ந்து காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு சிங்கப்பூர் இந்தியர்களுக்குப் பெருமையை தேடித் தருகிறது. ஒளிமயமான எதிர்காலம் அமைய திரு கிருஷ்ணசாமிக்கும் அவரது அமைப்பிற்கும் 50 முகங்கள் குழு, எங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

img1

"இது என்னைப் பற்றியதில்லை. எனது அமைப்பைப் பற்றியது. அதன் புகழ் காலத்திற்கும் நிலைக்கவேண்டும்."

இந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.

50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.